1986 ஆம் வருடம், பதினான்கு வயது சிறுவனாக இருந்தபொழுது, எனது தாத்தா காலமானதினால், மே 25 ஆம் தேதி காலை அவருடைய கடைசி காரியங்கள் செய்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்த நிலையிலே, சிவப்பு விளக்கு வைத்த ஒரு தமிழக அரசு வாகனம் உள்ளே வந்தது. அந்த வாகனத்திலிருந்து அன்றைய தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த திரு. முத்துசாமி அவர்கள் இறங்கி, துக்கம் விசாரிக்க வந்திருப்பதாகக் கூறினார்கள். அவர்கள் இரண்டு மணிநேரம் காத்திருந்து, ஈமச் சடங்குகள் எல்லாம் முடியும் வரை இருந்தார்கள். தாத்தா அரசியலிலே இருந்த காரணத்தினால், ஒரு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், திரு. ராஜ்குமார் மன்றாடியார், திரு. N.K.K. பெரியசாமி அய்யா, திருமதி. சுப்புலக்ஷ்மி ஜெகதீசன், திரு. புளியம்பட்டி சாமிநாதன், திரு. சாதிக் பாட்சா, திரு. கண்ணப்பன் போன்ற பல முன்னணி தலைவர்களெல்லாம் பேசினார்கள்.

அப்பொழுது, திரு. முத்துசாமி அவர்கள் பேசும்போது, “திரு. குட்டப்பாளையம் சாமிநாதன் ( எனது தாத்தா ) அவர்களின் இறங்கலுக்கு நான் எனது மனைவியையும் அழைத்து வந்திருப்பதற்குக் காரணம் இந்த குடும்பத்தோடு எனக்கு இருக்கும் உறவு. ஆனால், நான் இங்கே சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன், முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் நேற்று இரவு குட்டப்பாளையம் சாமிநாதன் அவர்கள் இறந்த செய்தியைக் கேட்டவுடன், என்னை தொலைப்பேசியிலே அழைத்து, தமிழக அரசு சார்பாகச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டார். அதில் தான் நான் அரசு வாகனத்திலே வந்திருக்கின்றேன். இல்லையெனில், எனது தனிப்பட்ட வாகனத்திலேயே வந்திருப்பேன்.

எம்.ஜி.ஆர். அவர்கள் குட்டப்பாளையம் சாமிநாதன் அவர்களிடத்திலே மிகுந்த அன்பு வைத்திருந்தார். 1972 ஆம் ஆண்டு தி.மு.க வில் இருந்து எம்.ஜி.ஆர் அவர்கள் பிரிந்த பொழுது, அ.தி.மு.க விற்கு வர மறுத்திருந்தாலும், பதினான்கு வருடங்கள் ஆனாலும் அவரை நான் மறக்கவில்லை. நான் பல முறை அவர் வீட்டிற்குச் சென்று தங்கியிருக்கின்றேன், அண்ணா மற்றும் கலைஞர் அவர்களுடனும் சென்றிருக்கிறேன். அதில் நீங்கள் சென்று அரசு சார்பில் மரியாதை செலுத்திவிட்டு வாருங்கள் என்று சொன்னார்,” என்று பேசினார்கள்.

அதைக் கேட்கும் போது சிறு வயதிலே என் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் சிறுவனாக இருந்த அந்த காலத்திலே, குடும்பத்திற்குள்ளேயும், வெளியே நண்பர்கள் மத்தியிலும் தி.மு.க விற்கு ஆதரவாகவும், அ.தி.மு.க விற்கு ஆதரவாகவும் சிலர் இருப்பார்கள். இது சகஜம்.

அப்பொழுது, ஒன்று எனக்குத் தெளிவாக விளங்கியது, அரசியல் பண்பு என்பது, அரசியல் மாண்பு என்பது இதுதான். எதிர் எதிர்க் கட்சியிலே இருந்தாலும், எதிரிகளாக இருக்க அவசியம் இல்லை என்பது என் மனதிலே ஆணித்தரமாகப் பதிந்தது. அதற்கு மிக முக்கிய கரணம் திரு.முத்துசாமி அவர்களின் பேச்சுதான்.

அதற்குப்பின், கலைஞர் அவர்கள், தாத்தாவின் பேரிலே, ஈரோட்டிலே ஒரு பெரிய விவசாய மாநாட்டினை நடத்தினார்கள். அதில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்கள். அப்புத்தகத்தில், அமைச்சர் நேரில் வந்து அரசு சார்பில் அஞ்சலி செலுத்தியதைக் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்து மகிழ்ந்தார்கள். அப்பேர்ப்பட்ட ஒரு மாமனிதர் திரு.முத்துசாமி அவர்கள். ஈரோடு மாவட்டத்தின் சிற்பி என்று அவர்களைக் கூறலாம்.

ஈரோடு மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கான ஒவ்வொரு வேலையிலும், பாதையிலும், அவர்களுடைய பங்கு அளவிட முடியாதது. அவர்கள், பத்து வருடங்களுக்கு முன்பு, தி.மு.க வில் தன்னை இணைத்துக்கொண்டு, தொடர்ந்து களப்பணி ஆற்றிவரும் ஒரு மாவட்டச் செயலாளர். அவரை வணங்குகிறேன். இதே போன்று இன்னும் பல தொண்டுகளை அவர் கொங்கு மண்டலத்திற்கும், தமிழகத்திற்கும் ஆற்ற வேண்டும் என்று உளமார விரும்புகிறேன்.

– கார்த்திகேய சிவசேனாபதி
17-10-2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *