கடந்த சில நாட்களாக சாதி இல்லாத, மதம் இல்லாத, சான்றிதழ் பெற்ற வேலூர் மாவட்டத்தினை சேர்ந்த வழக்கறிஞர், தங்கை சினேகாவை பற்றி பெருமையாக , இணையம் மற்றும் சமூக ஊடங்களில் பேசப்படுகின்றது.

ஒருபுறம் 5000 மேல் சாதிகள் உள்ள, 5 வர்ணங்கள் உள்ள, 5 மதங்கள் உள்ள நமது நாட்டில் இது வரவேற்கத்தக்கது. பாராட்டுக்கு உரியதே.

அரவிந்தர் ஆசிரமத்தின் மூலம், திரு. அரவிந்தரும், திரு.அன்னையும் (பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவர் பின்னர் அன்னை என்று போற்றப்பட்டவர்) ஆசைப்பட்டது போல் பாண்டிச்சேரி அருகே ஆரோவில் என்ற கிராமத்தினை உருவாக்கினர்.

ஆரோவில் ஒரு சர்வதேச குடியிருப்பு (INTERNATIONAL TOWNSHIP) ஆகும். இதன் நோக்கம் உலகத்திலேயே எந்த நாட்டை சேர்ந்தவராய் இருப்பினும் ஆரோவில்லின் கருத்தியலை ஏற்றுக்கொண்டு வாழலாம் என்ற அடிப்படையை சார்ந்தது.

அது போல் சாதி மத பிரிவினை இல்லாமல், உயர்ந்தவர் தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் என்றெல்லாம் இல்லாமல் ஒரு சமுதாயத்தை உருவாக்கி விட்டால், அன்று ஒரு சாதியோ மதமோ தேவை இல்லை என்று விட்டு விடலாம்.

ஆனால், இன்று சமூக நீதி பிற்படுத்தப்பட்டோரையும், தாழ்த்தப்பட்டோரையும், சில சிறுபான்மையினரையும், இன்னும் 5% கூட எட்டி பார்க்காத, தொட்டு பார்க்காத வாழ்க்கையில் எந்த மாற்றத்தினையும் சந்திக்காத ஒரு சூழ்நிலையில் இருக்கின்ற பொழுது, இவர்களின் செயல் கண்டு தானும் சாதி அற்றவன் மதம் அற்றவன் என்று பெருமைக்காக ஒரு சான்றிதழை பெற, புரிதல் இல்லாமல் சிலர் முயற்சி செய்தால் அவர்களுக்கு மட்டும் இன்றி, இன்றும் வாழ்கை தரத்தினை கனவு மட்டும் கண்டு கொண்டு இருக்கும் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் எதிர்காலத்திற்கு பெரும் பங்கமாய் அமையும் என்பதில் ஐயமில்லை.

அது மட்டும் இன்றி இப்படி சான்றிதழ் பெற்றோரின் குழந்தைகளின் நிலைமை என்ன என்று கருத்தில் கொள்ள வேண்டும். சாதி அற்றவர்கள் மதம் அற்றவர்களாக தான் பார்க்க படுவார்களா? அல்லது தந்தை தாயின் சாதி சான்றிதழ் வேண்டுமாயின் கொடுக்கப்படுமா ? என்பதும் கருத்தினில் கொள்ள வேண்டும்.

புரிதல் இன்றி பெருமைக்காக “சாதியை ஒழிக்கின்றேன்” என்று கூறிக்கொண்டு, இதை யாரும் அவசர பட்டு செயல் படுத்திவிட கூடாது. சாதி இல்லாத ஒரு சூழ்நிலை இன்னும் எத்தனை வருடம் கழித்து ஏற்படும் என்று தெரியாது.

அவ்வாறு நடந்தால் அது நிச்சயம் வரவேற்க தக்கது. ஆனால் “சாதியை பற்றி பேசாமல் இருப்பதால் சாதி அற்ற சமுதாயம் உருவாகி விடாது”.

சாதியை பற்றி பேச வேண்டும். இந்த சாதி 50 வருடங்கள் முன்பு எப்படி இருந்தது என்று விவாதிக்க வேண்டும். இன்று, குறிப்பாக தமிழகத்தில் சமூக நீதியால் கல்வியால், வேலை வாய்ப்பினால் எவ்வாறு ஒரு சமூகம் முன்னேறி இருக்கின்றது என அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

அடுத்த நூறு ஆண்டுகள் இந்த கல்வியும் சமூக நீதியும், வேலை வாய்ப்பினை சார்ந்தோருக்கு, அந்த சாதி சங்கங்கள், கூட்டு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் கொண்டு செல்லுதல் வேண்டும்.

மேற்படிப்பு, உயர் கல்வி, அரசு உதவி மற்றும் மானியங்கள் நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு, மேலும் அமைப்புகள் தரும் பொருளாதார உதவி ஆகியவை எடுத்து கூறி சமூகத்தில் பாரபட்சம் இன்றி தாழ்த்தப்பட்டோர், உயர்ந்தோர், பிற்படுத்தப்பட்டோர், வித்யாசம் இல்லாத ஒரு சமுதாயத்தினை உருவாக்குவதே நல்ல முயற்சியாய் இருக்குமோ தவிர, அவசரப்பட்டு தான் சாதி இல்லாதவன், மதம் இல்லாதவன் என்ற சான்றிதழை பெற முயற்சி செய்வது இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாய் பல வர்ணங்கள் கோட்பாடுகளாய் உள்ள நாட்டிலே ஆபத்தாய் இருக்கும்.

இது ஒரு குறுகிய பார்வையின் வெளிப்பாடே என்பது என் கருத்து.

நன்றி வணக்கம் !!

– கார்த்திகேய சிவசேனாபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *