கீழ் பவானி திட்டம்!
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர்தான் இயற்கை, கலாச்சார, பண்பாட்டு மீட்டெடுப்பில் இவரின் பங்களிப்பு என்று நினைப்பவர்களுக்கான பதிவு, வாழையடி வாழையாக தொடர்ந்து நாட்டுமாடுகளின் பாதுகாப்பு, அவைகளை அழிவிலிருந்து காத்தல், இழந்து கொண்டிருக்கும் இயற்கை, கலாச்சாரம் , பண்பாடு, மொழி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் Karthikeya Sivasenapathy அண்ணாவுடனான அறிமுகம் பற்றிய கடந்த கால பதிவு. தற்போது வனத்துக்குள் திருப்பூரின் அங்கம்.
#மீள்
கீழ் பவானி வாய்க்கால் சுமார் 201 கிலோமீட்டர் நீளம் கொண்டது 2.07 லட்சம் ஏக்கர் பாசனத்திற்கு உதவுகிறது. உலகத்தில் இருக்கும் மண்ணாலான கால்வாய்களில் இதுவும் ஒன்று மிக பழமை வாய்ந்ததும் கூட.
இந்த கால்வாயின் இரு மருங்கிலும் சுமார் 60 கிலோமீட்டர் நீளத்திற்கு மரங்கள் நிறைந்து ஒரு அடர்த்த வனம் போல் காணப்படும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கால்வாய் மொத்தமும் கான்க்ரீட் தளம் அமைத்து தர உலக வங்கியின் உதவி நாடப்பட்டு சுமார் ரூபாய்.1200 கோடி ரூபாய் செலவில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.
இந்த தகவலை அறிந்து கடும் போரட்டம் செய்து உலக வங்கி அதிகாரிகள் வரை இந்த பழமையான கால்வாயின் பாரம்பரியத்தையும் , அதன் கரைகளில் உள்ள மரங்களின் முக்கியத்துவத்தயும் சரியாக கொண்டு சேர்த்து அந்த திட்டத்தை ரத்து செய்ய வைத்து அனைத்து மரங்களையும், மரத்தின்பால் வாழும் அனைத்து உயிரினங்களையும் காத்த பெருமை திரு.கார்த்திகேயசசிவசேனாபதி அவர்களையே சாரும்.
நேற்றைய வனத்துக்குள் திருப்பூர் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த இவரை அறிமுகப்படுத்தும் போது இந்த நிகழ்வை நான் நினைவு கூர்ந்தேன், நிச்சயம் அவருக்கே ஆச்சர்யமாக இருந்திருக்கும்.
நேற்றைய நிகழ்வின் அழைப்பிதழை தருவதற்காக அவரின் குட்டப்பாளையம் காங்கயம் கால்நடை ஆராய்ச்சி கழகத்திற்கு சென்றிருந்தேன் , இதற்கு முன்னர் அவரை சமூக மற்றும் வெகுஜன ஊடகங்கள் வாயிலாக மட்டுமே அறிந்திருந்தேன், அவரின் உரையாடல்களும் , எழுத்துக்களையும் வைத்து எனக்குள் ஏற்பட்ட ஒரு முரட்டு மனிதர் என்ற பிம்பத்தை தவிடு பொடியாகிவிட்டது அவரின் வரவேற்பும் , உள்ளார்ந்து எங்களது அமைப்பின் செயல்பாடுகளை கேட்டறிந்த விதமும்.
குறித்த நேரத்திற்கு விழாவிற்கு வந்து, அனைத்து தரப்பு மக்களிடமும் சிறிதும் சோர்வில்லாமல் மலர்ந்த முகத்துடன் கொங்கு மண்ணிற்கே உரிய ஆக சிறந்த மரியாதையுடன் உரையாடிய விதமும், மரம் வைக்க வந்த இடத்தில் மாடுகளை பற்றி பேசலாமா வேண்டாமா என்ற மனப்போராட்டத்துடன் பேசாமல் அமர்ந்த அவரை நிச்சயம் நீங்கள் மாடுகளை பற்றி பேசவேண்டும் என்று பணிந்து பின்னர் நாட்டு மாடுகளை பற்றி சிறப்பாக உரையாற்றி அமர்ந்தார்.
விழாவின் மேடை நிகழ்வுகள் முடிந்த பின்னர் அனைவரும் கிழே இறங்கிய பின்னர் ஒரு பெரியவர் நான் ஓரிரு வார்த்தை பேசவேண்டும் என கூறி தான் காங்கேயம் காளைகளை வளர்த்து வருவதாகவும், திரு.கார்திகேயசிவசேனாபதி நடத்திய காங்கேயம் காளைகளுக்கான கண்காட்சியில் தனது காளையுடன் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றதாகவும், அந்த புகைப்படத்தை தனது வீட்டின் ஹாலில் மாறியுள்ளதாக மிகுந்த பெருமிதத்துடன் கூறி, காங்கேயம் காளைகளை காக்க தொடர்ந்து போராடுங்கள் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என் உணர்வுபூர்வமாக கூறினார்.
காங்கேயம் காளைகள் உட்பட நாட்டு மாட்டு இனங்களை இவரின் தந்தை, தாத்தா உட்பட தலைமுறைகளாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடக்கும் சந்தைகளுக்கு சென்று காட்சிப்படுத்தி இனத்தை பெருக்கி காத்து வந்த செய்தியும் நேற்று அறிந்த ஒன்று.
இயற்கையை அன்னையை நோக்கி நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் அவள் உங்களை நோக்கி 10 அடி முன்னே வருவாள், நீங்கள் செய்து வரும் தொலைந்த, தொலைந்து வரும் இயற்கையை மீட்டெடுக்கும் முயற்சி பெரும் வெற்றி பெரும், இயற்கை என்னும் ஒற்றை புள்ளியில் உங்களோடு நாங்கள் இணைகிறோம் மலை போன்ற உங்களின் முயற்சிக்கு சிறிய கடுகாக எங்களின் உறுதுணை இருக்கும் என நேற்றைய நிகழ்விலும் சொன்னோம், இங்கேயும் பதிவிடுகிறேன்.