நினைவு தெரிந்த நாள் முதல் ஆடு மாடு, கிராமம், விவசாயம், இது தான் எனது வாழ்வின் சாராம்சமாக இருந்து இருக்கிறது.
பாரம்பரிய கால்நடையை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் 2007 – 2008 இல் Dr.கந்தசாமி, முனைவர் பன்னீர் செல்வம் எழுதிய புத்தகத்தின் மூலம் தோன்றியது.
அப்புத்தகத்தில் 1940 களில் 34 லட்சம் காங்கேயம் மாடுகள் இருந்ததாகவும் 1990 களில் அது 11 லட்சம் மாடுகளாகக் குறைந்ததாகவும் 2004 இல் 4 லட்சம் மாடுகளாக, குறைந்ததாகும் தகவல் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
அது மட்டும் இன்றி மற்ற பாரம்பரிய இனங்களை உருவாக்கிய இனம் காங்கேயம் மாடு எனவும் அந்த மாடுகளின் எண்ணிக்கையும் விறுவிறு எனக் குறைந்து வருவது பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்கள். டாக்டர் கந்தசாமி மற்றும் முனைவர்.
பன்னீர்செல்வம் ஆகியோர் விலங்கு மரபியல் துறையில் முன்னோடிகளாக உள்ளனர். டாக்டர்.கந்தசாமி மற்றும் முனைவர் பன்னீர் செல்வம் ஆகியோர் கால்நடை மரபியலில் வல்லுநர்கள்.
கால்நடை துறை மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள் அவர்கள் மீது மிகப் பெரிய மரியாதையும் மதிப்பும் வைத்து இருப்பதைக் கண்டு நான் வியந்து இருக்கிறேன்.
பத்து வருட காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பாரம்பரிய மாடுகளே அழிந்து விடும் என்பதை உணர்ந்தேன் அப்புத்தகத்தின் வாயிலாக.
இதற்காக எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலே சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையம் என்ற அறக்கட்டளையை உருவாக்கினோம்.
ஒன்பது பேர் கொண்டு உருவாக்கிய அந்த அறக்கட்டளைக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தவர் K’sirs பள்ளியின் தாளாளர் திரு. தேவப்ரகாஷ் அவர்கள்.
மாடுகளுக்கான அழகு போட்டி (Cattle show) நடத்துவது கால்நடை வைத்து இருப்போரின் சிரமங்களையும் தேவைகளையும் அரசுக்கு எடுத்துக் கூறுவது, விவசாயிகளுக்கும் அரசுக்கும் ஒரு பாலமாக இருப்பது, கால்நடையை வைத்து கிராம பொருளாதார முன்னேற்றம், விவசாய நிலமற்ற விவசாயிகள் கால்நடையை வைத்து வாழ்வாதாரத்தை முன்னேற்றிக்கொள்வது, குறிப்பாகப் பெண்களின் வாழ்வாதாரம், மற்றும் சுயமுன்னேற்றம், கால்நடையின் சாணி மற்றும் சிறுநீர் கொண்டு இயற்கை விவசாயம் கற்று கொடுத்தல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்வது, பார்வையாளர்கள் இயற்கை விவயசயம் கற்றுக் கொள்ளுதல், மரம் நடுதல், மழை நீர் சேகரித்தல் , ஆகிய பணிகளில் ஈடு பட்டு வந்தோம் SKCRF இன் மூலமாக.
உலகம் முழுவதும் அந்த அந்தப் பகுதிகளில் அவர்களின் பாரம்பரிய கால்நடைகள் மற்றும் கால்நடை வைத்து இருப்போரின் வாழ்வாதாரங்களில் பணிபுரியும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் உடன் பணிபுரியம் பொழுது அவர்களால் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகள் ஒன்றே என்பது புரிய வந்தது.
பாரம்பரிய கால்நடைக்கும் கோடிக்கணக்கான ஹெக்டேர் மேய்ச்சல் பூமிக்கும் அரசாங்கங்களுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் அந்தப் பூமி தேவைப்படுவதும் புரிய வந்தது.
உலகம் முழுவதும் பாரம்பரிய கால்நடை வைத்து இருப்பதற்கும் என அழைக்கப்படும் பூமிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
இந்தப் பூமிகள் இல்லாமல் கால்நடையை வைத்து இருக்க இயலாது. இந்தப் பாரம்பரிய கால்நடைகளை ஒழித்து விட்டால் அந்தப் பூமியும் அரசுக்குச் சொந்தமானதாக ஆகி விடும்.
இந்தப் பாரம்பரிய கால்நடையை அழிப்பதில் அரசுகளுக்கும் அந்த ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
ஒன்று கால்நடையை அழித்து, கால்நடையின் பல்லுயிர் தன்மையை அழித்து தொழில் முறை விவசாயம் கொண்டு போவது, மற்றொன்று அந்தக் கால்நடை இல்லாமல் அந்தக் கால்நடை மேய்க்கக் கூடிய பூமியைப் பெருநிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது.
எப்படி நமது வீட்டு புடக்காலியில் உள்ள கோழிகளை இரண்டு நிறுவனங்கள் வர்த்தக படுத்தி அதற்குச் சொந்த காரர்கள் ஆகி விட்டார்களோ , அது போல மாட்டினங்களையும் வர்த்தக படுத்துவது புரிய வந்தது.
2010 ஆம் வருடம் ஐக்கிய நாட்டுச் சபையின் (UNEP) இன் (UNCBD) (COP) பத்தாவது கலந்துரையாடலில், எந்தச் சமூகம் உலகத்திலேயே முதன் முதலாகப் பல்லுயிர் ஓம்புதல் பற்றி (conservation of Bio-Diversity) பற்றி முதன் முதலாக இலக்கிய இலக்கணங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்ற விவாதம் நடந்து கொண்டு இருந்தது.
17 நூற்றாண்டில் தான் தொழில் புரட்சி ஏற்பட்டு இருக்க முடியும், அதன் பிறகு தான் பல்லுயிர் ஓம்புதலைப் பற்றி மனித சமுதாயம் சிந்தித்து இருக்க முடியும் என்று விவாதித்துக் கொண்டு இருந்தனர்.
அப்பொழுது நான் குறுக்கிட்டு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் “தமிழ் கூறும் நல் உலகில்” அய்யன் திருவள்ளுவர் பல்லுயிர் ஓம்புதலைப் பற்றி கூறி இருக்கிறார் என்றேன்.
அப்பொழுது வட இந்தியாவில் இருந்து வந்து இருந்த ஒரு அதிகாரி “தென் இந்தியர்களுக்கு எதை எடுத்தாலும் ஆயிரம் இரண்டாயிரம் வருடங்கள் என்று கூறுவதிலேயே ஒரு மகிழ்ச்சி” என்றார். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, வந்து இருந்த அந்தக் கூட்டத்திலே MSSRF தலைவர் முனைவர் சுவாமிநாதன் அவர்களும் இருந்தார்.
அன்று இரவு உணவு உண்ணும் பொழுது முனிவரிடம் சென்று தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று காலை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பல்லுயிர் ஓம்புதல் பற்றி இலக்கியங்களில் குறிப்பிட்டு இருப்பதாகக் கூறினார், அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்க, முனைவர் சிரித்து கொண்டே இரண்டாயிரம் வருடம் என்று கூறியது தவறு என்றும், மூவாயிரம் வருடம் என்று கூறி தொல்காப்பியத்தை எடுத்துக் காட்டினார். மேலும் தொல்காப்பியத்தில் இருந்து சரளமாக இரண்டு மூன்று பாடல்களை மேற்கோளும் காட்டினார்.
கனடா நாட்டின் டொரொண்டோ பகுதியின் மேயரும் அவரது மனைவியும் அங்கே இருந்தார்கள். அவர் கூறியது,
“In the honor of Tamil race, I would like to host a dinner tomorrow and my city Toronto has a sizeable Tamil population” என்றார்.
இது போல ஐக்கிய நாட்டுச் சபையின் UNFAO 2014 கென்யாவின் தலைநகரான நைரோபி கலந்து கொண்டேன், உலக கால்நடை வைத்து இருப்போர் மாநாடு. அங்கே மாசாய் இன மக்களுடன் பழகி அந்தக் கால்நடை எப்படி அவர்களதுஅய்ய வாழ்வாதாரம், திருமணம் செய்து கொடுக்கும் பெண்களின் சீதனம், சில சமயங்களில் இரண்டு வகுப்பினர் இடையே வரக்கூடிய சண்டையில் சில நூறு மாடுகளைக் கொடுத்து தான் அங்கே அமைதி நிலவுகிறது, என்பதை அறிந்தேன்.
http://www.pastoralpeoples.org/wp-content/uploads/2015/03/lpp-ar-2013-10-09-14.pdf
மறுபடியும் 2013 கென்யாவில் பாஸ்டோரலிசம் (WCOP) மாநாடு
Participation in 3rd Multistakeholder Platform of the GASL in Nairobi, சில திடுக்கிடும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
அதாவது உலகத்திலேயே சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியது பாரம்பரிய கால்நடை வைத்து இருக்கும் முறை என்றும், ஆதலால் உலக நாடுகள் மற்றும் அரசு சாரா பிரதிநிதிகள் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றப் பட வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது.
அந்தத் தீர்மானம் என்னவென்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகத்தில் இருக்கக் கூடிய பாரம்பரிய கால்நடையின் எண்ணிக்கையைப் பாதியாக குறைப்பதாகவும் அதற்குப் பதிலாக தொழில் துறை பண்ணை அமைப்பு கொண்டு வரப் பட வேண்டும் என்றனர்.
ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த விவசாயம் மற்றும் கால்நடை அதிகாரிகள் அதற்குக் கண்டனம் தெரிவித்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
இந்திய நாட்டுச் சார்பாக வந்து இருந்த உயர் அதிகாரி அவருடைய, Thomas cook travel house cheque எண்ணிக் கொண்டு மாசாய் மாற என்ற ஒரு சுற்றுலா தளத்திற்கு இது முடிந்தால் செல்லலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டு இருந்தார்.
இந்த அநியாயமான தீர்மானத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து நானும் இந்தியா துணை கண்டத்தில் இருந்து வந்து இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நீலகண்ட மாமா (குறும்ப ஆடு வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் – ஒரு முறை கர்நாடகாவில் மேய்ச்சல் நிலத்தை அரசு தனியாருக்கு தாரை வார்க்க முயற்சித்த பொது மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் கர்நாடகாவிற்குமான நெடுந் சாலையைப் பல லட்சம் ஆடுகளைக் கொண்டு தொடர்பைத் துண்டித்து ஸ்தம்பிக்கச் செய்தவர் ) திரு ஹன்வன் சிங்க் ரத்தோர் ராஜஸ்தானில் ரைக்க என்ற இனத்தின் கலாச்சாரத்தையும் அவர்களின் பாரம்பரிய கால்நடை வளர்ப்பான ஒட்டகம் வளர்ப்பையும் நம்மைப் போல் அங்கே LPPS என்ற அமைப்பை உருவாக்கிப் பாதுகாத்து மற்றும் ஆவணப் படுத்தி வருபவர்.
Dr. ILLSE KOHLER ROVLER ZEN ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் கடந்த 25 வருடகாலமாக ராஜஸ்தானில் ரைக்காகளுடன் பணி புரிந்து வருபவர்.
அனைவரும் ஒன்று கூடி அந்தத் திட்டத்தினை எதிர்த்து முற்றுகை இட்டோம். அமெரிக்கன் மாடு உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதிநிதி எங்களை மிரட்ட “DON’T YOU DARE OPPOSE THE RESOLUTION” என்று கூற UNFAO ஒருங்கிணைப்பாளர் UNFAO அவர்களை அழைத்து இருக்கிறது.
அவர்கள் UNFAO விருந்தாளிகள். இங்க கருத்து கூறி ஒன்றை ஆதரிக்க எதிர்க்க அவர்களுக்கு உரிமை உண்டு என்று அந்தச் சர்ச்சை ஓய்ந்து, அந்தத் தீர்மானம் தள்ளுபடி செய்ய பட்டது.
இது போல பல வகையான வர்த்தக பொருளாதார ரீதியான அரசியலைப் பார்த்து வந்தேன். ஆதலால் தான் 2012 முதல் ஜல்லிக்கட்டு பிரச்சினையை கவனிக்க ஆரம்பித்ததில் ஜல்லிக்கட்டுக்காகப் பல அமைப்புகள் மிகச் சிறந்த வேலைகளைச் செய்து வந்தார்கள்.
2013 வருடம் PETA அமைப்பு மெரினாவில் காந்தி சிலை அருகில் ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு போராட்டத்தை நடத்த ஒருங்கிணைத்து இருந்தார்கள்.
அதனைக் கண்டு நாங்களும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக அதே தேதியில் அதே நேரத்தில் அங்கே வந்து நிற்போம் என்று அறிவித்து இருந்தோம். அங்கு வந்து இருந்த நான்கு குழந்தைகளையும் சேர்த்து நான், நமது அறக்கட்டளையைச் சேர்ந்த திரு. சுந்தர் கனெக்ஷன். திரு. ஹிமாகிறன், திரு ராஜ்குமார் பழனிச்சாமி, அவருடைய மனைவி குழந்தை, செல்வி நந்தினி என்னும் கல்லூரி மனைவி ஆகியோர் அங்கே வந்தோம்.
எங்களைக் கண்ட PETA அமைப்பினர் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். அதற்குப் பின் அவர்கள் பெசன்ட் நகர் கடற்கரை சென்று போராட்டம் நடத்தியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது. முதன் முறையாக ஜல்லிக்கட்டு வேண்டும் என்றும் சிலர் போராடினர் என்றும் அப்பத்திரிகை குறிப்பிட்டு இருந்தது.
ஜல்லிக்கட்டில் பல அமைப்புகள் வேலை செய்து வந்த நிலையில் இந்த அமைப்புகள் எல்லாம் ஒன்றுபட்டுப் போராடுவது மிக முக்கியம் எனக் கருதி அனைத்து ஜல்லிக்கட்டு அமைப்புகள் பாரம்பரிய கால்நடை வளர்ப்போர் சங்கங்கள்(உம்பளாச்சேரி, பர்கூர், தேனீ மலைமாடு, காங்கயம் புளியங்குளம்) ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், உச்சநீதி மன்ற வழக்கறிஞர்கள், நமது அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆகியோரை, ஒன்று கூட்டி ஒரு கலந்துரையாடலை நடத்தி, தேசிய பல்லுயிர் சட்டம் மற்றும் இதைக் கலாச்சார நிகழ்வு என்றும் அணுக வேண்டும் என்று எடுத்துரைக்கப் பட்டது.
அதற்குப் பின்னால் May 2014 ஒரு நீயா நானா நடைபெற்றது. அதில் மிருகநல ஆர்வலர்களுக்கும் நமக்கும் எப்பொழுதும் போல் விவாதம் நடந்தது.
மறுபடியும் 2016 ஜல்லிக்கட்டு தடைக்கு பின் நடந்த நீயாநானாவில் ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டது.
அதற்குப் பின் தம்பி ஹிப்ஹாப் தமிழாவின் டக்கரு டக்கரு இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரும் வரவேற்பைப் பெற்று இதற்குப் பின் இருந்த தியை அம்பலப்படுத்தியது.
2017 முகநூல் நண்பர்கள் பங்கேற்ற போராட்டத்தில் ஐம்பதாயிரம் பேர் கலந்து கொண்டது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு அந்த வருடம் நடக்காமல் இருந்த சூழ்நிலையில் அங்கே போராட்டத்தை அறிவித்து இருந்தோம்.
திரு, PR ராஜசேகரன் அவர்கள் தலைமையில் நடந்த போராட்டத்தில், நானும் தம்பி ஆதியும் பங்கேற்றோம்.
அங்கே ஒரு லட்சத்திற்கும் மேல் இளைஞர்கள் கூடியது மட்டற்ற மகிழ்ச்சியும் தமிழக மக்களிடம் இருந்த கொந்தளிப்பையும் காட்டியது.
பாண்டிய சேர சோழ பல்லவ ஆண்ட பகுதிகள் மட்டும் இன்றி நாடு முழுவதும் இருந்து இளைஞர்கள் கூடினார்கள். மிக அமைதியான முறையில் நடந்த அந்தப் போராட்டம், கலைப்பதற்கு முயற்சி எடுத்தனர்.
நாங்கள் எல்லாம் போராட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய பின், பல்லாயிரக்கணக்கான மக்கள் வாடி வாசல் முன்பு அமர்ந்து, 5 காளைகளையாவது விட வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கினர்.
கோயில் காளையை தவிர வேறு எந்தக் காளையை வாடி வாசல் வழியாக விட்டாலும் உச்ச நீதிமன்ற அவமதிப்பாகும் என்று தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் மறுத்து விட்டனர்.
அதனைத் தொடர்ந்து அங்கே விடியும் வரை போராடி வந்தனர். அவர்களைக் காவல்துறை கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் வைத்து இருந்தனர்.
அலங்காநல்லூரில் கைது செய்தவர்களை விடுதலை செய்ய கோரி சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் கூடினார்கள்.
அதுவே தமிழகம் முழுவதும் போராட்டமாக வெடித்து மெரினா புரட்சி அல்லது தை புரட்சியாக மாறியது.
இதே நாள் போன வருடம் மெரினாவில் இருந்தவர்களுடன் பேசிய பின்னர் அன்று இரவே டெல்லி சென்று மத்திய உள்துறை மற்றும் சுற்று சூழல் அமைச்சர்,தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர், மிருக நல வாரியம் ஆகியோரைச் சந்தித்தது பற்றியும் பல சந்தர்ப்பங்களில் பேசி இருக்கிறேன், எழுதி இருக்கிறேன்.
இப்பேற்பட்ட ஒரு போராட்டத்தை இவ்வளவு அமைதியாக நடந்ததை உலகமே கண்டு இருக்காது.
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தமிழ் மானம் காத்த தமிழச்சிகளுக்கும் விவசாயம் சார்ந்த கால்நடை வைத்து இருப்போர் வாழ்நாள் முழுவதும் கடமை பட்டு இருப்போம்.
எந்த வித சொந்த ஆதாயம் இல்லாமல் சுயநலம் பாராமல் காளையோ ஜல்லிக்கட்டையோ நேரில் பார்க்காதவர்கள் கூடப் போராடியது நெஞ்சை நெகிழச் செய்து, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதது. நான் பார்த்த பல காட்சிகளில் சில காட்சிகள் மட்டும் குறிப்பிடுகின்றேன்.
- கல்லூரிக்குச் செல்லும் மாணவியை அப்பா போராட்ட களத்தில் கொண்டு வந்து விட்டு சாப்பாடு பையைக் கையில் கொடுத்து “பார்த்து பத்திரமா போராடுமா” என்றார்.
- மெரீனா கடற்கரையில் நடந்து வரும்போது, நிறை மாத கர்ப்பிணி பெண் என் கைகளை பிடித்து அவள் வயிற்றில் வைத்து என் கருவையும் ஆசீர்வதியுங்கள் அண்ணா! நாளை என் பிள்ளையும் வந்து போராடட்டும்! என்றார்.
இது போல பல நூறு சம்பவங்கள் என் மனதில் பசுமையாக ஊஞ்சல் ஆடுகிறது. சட்ட திருத்தும் வந்து, பத்திரிகையாளர் சந்திப்புக்கு பின் நடந்த அந்த அசம்பாவிதங்கள் நீங்க வலியும் காயத்தையும் ஏற்படுத்தியது.
வாழ்க்கை படமாக நான் கற்று கொண்டது பொது வாழ்க்கையில் எதைச் செய்ய பார்த்தாலும் பலர் நம்மை ஆதரித்தாலும் எந்த ஒரு தனி மனிதனும் அநீதியின் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவன் அல்ல என்பதையும் உணர்ந்தேன்.
அது சில நாட்களுக்குக் காயத்தை ஏற்படுத்தி இருந்தாலும் நான் செய்வதை செய்து கொண்டே தான் இருப்பேன் என்ற முடிவுடன் செயல்பட்டு வந்து இருக்கின்றேன்.
மிகப் பெரிய மகிழ்ச்சியாக மெரினா புரட்சி அல்லது ஜல்லிக்கட்டு போராட்டமாக அமைந்தது. அதே வருடத்தில் என்னை வருத்தத்திற்கு உள்ளாக்கிய இரண்டு சோகம், ஒன்று மெரினாவில் காவல் துறையின் அத்துமீறல், இரண்டாவது அனிதாவின் மரணம்.
சிலர் என்னைக் கேட்கின்றனர், நீங்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றீர்கள். எதற்காக NEET நெடுவாசல், கதிராமங்கலம், மொழி, ஹிந்தி எதிர்ப்பு, சமூக நீதி பற்றி பேசி விமர்சனங்களுக்கு உள்ளாகின்றீர்கள். மாடு கோமியம் இயற்கை விவசாயம் ஆகியவற்றைப் பற்றி மட்டும் பேசி தங்கள் புகழை பெருக்கிக் கொள்ளலாமே ? என்கின்றனர்.
என்றுமே என் மனதில் என்ன படுகின்றதோ எது நீதி என்று தோன்றுகின்றதோ அதற்காகக் குரல் கொடுத்து இருக்கிறேன், இனிமேலும் கொடுப்பேன் !!
தமிழர்களைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்றால் எங்களுக்கு எங்கள் மொழி தான் கடவுள்.
உலகில் உள்ள வெகு சில கலாச்சாரங்களே தங்களுடைய மொழியை மதமாகவும் கடவுளாகவும் கருதக்கூடியவர்கள்.
அப்படிப்பட்ட இந்தத் தமிழ் கூறும் நல் உலகில் மனிதனாகப் பிறந்ததற்கு நன்றி கூறி எத்தனைப் பிறவி எடுத்தாலும் இந்தத் தமிழ் கூறும் நல் உலகில் புல்லாகவோ பூண்டாகவோ பிறக்க வேண்டும் என்று வேண்டி….
-கார்த்திகேய சிவசேனாபதி
19/01/2018