ஜெர்மன் நாட்டின் மக்கள் தொகை (8.27) எட்டு கோடியே இருபத்தி ஏழு லட்சம். தமிழகத்தின் மக்கள் தொகையும் சுமார் அதே அளவு 2018 ஆம் ஆண்டின் நிலவரப்படி.
நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இந்தியநாடு ஒரு மிகப் பெரிய நாடு. இந்த நாட்டிற்குள் நாடுகள் இருக்கின்றன, பல விதமான மொழிகள் இருக்கின்றன.
எப்படி பிரான்ஸ் நாட்டில் பிரெஞ்சு மொழி, ஜெர்மன் நாட்டில் ஜெர்மனி, இத்தாலி நாட்டில் இத்தாலியன் , ஸ்காட்லாந்து நாட்டில் ஸ்காட்டிஷ், ஐயர்லாந்தில் ஐரிஷ், இங்கிலாந்து நாட்டில் ஆங்கிலம் இருக்கின்றதோ, அந்த மூன்று தேசிய இனங்களும் சேர்ந்து தான் UNITED KINGDOM என்ற நாடாக ஆகின்றது.
அது போல இந்திய நாட்டிற்கு இந்தியன் என்ற தேசிய இனமோ, ஒரு மொழியோ, ஒரு கலாச்சாரமோ கிடையாது. இந்திய தேசம் பல தேசங்களும், தேசிய இனங்களும், அடங்கிய ஒரு தேசம்.
தமிழக முதலமைச்சராக இருப்பவரின் பதவியும் ஜெர்மன் நாட்டின் அதிபராக (CHANCELLOR) ஆக இருக்கும்பதவியும் ஒரே அதிகாரம் உடையது தான். அவர்கள் ஆளக் கூடிய மக்கள் தொகையின் அளவும் ஒன்று தான்.
தமிழக முதலமைச்சரின் கடமைகளில் வெளியுறவுத்துறையும் பாதுகாப்புத்துறையும் மட்டும் தான் இவர்களின் மேற்பார்வையின் கீழ் வராதது.
ஆதலால் நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால்,
ஜனநாயகம் என்றால் என்ன ?
கூட்டாட்சி முறை என்றால் என்ன ?
ஒரு முதலமைச்சருக்கு என்ன மரியாதையைக் கொடுக்க வேண்டும் ? என்பதை.
முதலமைச்சர்கள், நடுவண் அரசாங்கத்திற்கு அடிமைகள் அன்று, இதை எல்லாம் புரிந்து கொண்டு இப்பொழுது கேரளா மாநிலத்தில் நடக்கக் கூடிய பேரிடருக்கு நடுவண் அரசாங்கம் தானாக முன்வந்து செய்ய வேண்டிய கடமையையும் செய்யாமல் மாற்றான் தாய் மனப்போக்கில், தாய்லாந்து, UAE போன்ற வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய உதவியைத் தடுப்பது கூட்டாட்சி முறைக்கு எதிரான ஒரு நடப்பு ஆகும்.
கேரளத்தின் முதலமைச்சர் ஒரு மிகசிறந்த மாமனிதர். அரசியல் சித்தாந்தத்திற்கு அப்பாற்பட்டு அந்தமாநிலத்திற்காகவும் மாநில மக்களுக்காகவும் உழைத்துக் கொண்டு இருப்பவர். அமெரிக்காவில் உள்ள MINNESOTO மாநிலத்தில் MINNEAPOLIS நகரத்தில் MAYO CLINIC மருத்துவ பரிசோதனைக்காக செல்ல வேண்டி இருந்த பொழுதும், மருத்துவர்களின் அறிவுரைக்கு எதிராக, கேரளா மக்களுக்காக உழைத்துக் கொண்டு இருக்கக் கூடியவர்.
நடுவண் அரசாங்கத்தின் சித்தாந்தத்திற்கு எதிராக இருக்கக் கூடிய ஆட்சி என்ற ஒரே காரணத்திற்காக கேரளா மாநிலத்தை நடுவண் அரசாங்கம் நசுக்குகிறது.
இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான ஒரு செயல் ஆகும். இன்று கேரளாவுக்கு நடப்பது நாளைத் தமிழகம், கர்நாடக, பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர் , வடகிழக்கு மாநிலங்கள், மஹாராஷ்ட்ரா, மற்றும் ஒடிசாவிற்கும் நடக்கும். இப்படி எந்த எந்த மாநிலங்கள் மத்தியிலே, ஆட்சியிலே இருக்கக் கூடிய ஒரு சித்தாந்தத்திற்கோ, கட்சியோ சேராத மாநிலத்திற்கு, இப்படி ஒரு இரண்டாம் தர நடத்துதல் நடக்கும். இதனை நாம் ஒன்று கூடி எதிர்க்க வேண்டும்.
கேரளாவிற்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்த்து குரல் கொடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.
நாம் ஒரு மிகப் பெரிய தேசமாக இருக்கும் காரணத்தினால் நமது முதலமைச்சர்கள் மற்றும் மாநிலத்தின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்வது இல்லை.
முதலமைச்சர்களோ, மாநில சட்டசபைகளோ, நடுவண் அரசாங்கத்தின் அடிமைகள் கிடையாது. (2016 முதல் இன்று வரை இருக்கும் தமிழக அரசைப் பற்றி பேசவில்லை). முதலமைச்சர்களும் நடுவண் அரசாங்கமும் சரி சமமான பதவியை வகிக்கக் கூடியவர்களே.
சரி சமத்தை விடச் சட்ட ஒழுங்கு கால்நடை விவசாயம் போன்ற பல துறைகளில் நடுவண் அரசாங்கத்தை விட அதிக செல்வாக்கும் அந்தஸ்தும் பெற்றவர்கள். இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் மிகத் தெளிவாக பல வருட விவாதத்திற்குப் பின் (CONSTITUENT ASSEMBLY DEBATES) மாநில அரசுகளுக்கும், நடுவண் அரசாங்கத்திற்கும் தெள்ளத்தெளிவாக உரிமைகளை நிர்ணயப்படுத்தி இருக்கின்றது.
தமிழகம் மாநில உரிமைகளையும், கூட்டாட்சி தத்துவத்தையும் நிலைநிறுத்தத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டு இருந்து இருக்கின்றது (2016 வரை). இன்று கூட்டாட்சி தத்துவத்தைப் பற்றியும் மாநில மொழி உரிமைகளைப் பற்றியும் பேசுபவர்களைத் தேச துரோகி என்றும் தேச பற்று இல்லாதவர்கள் என்றும் சித்தரிக்க கூடிய ஒரு கோமாளி கூட்டம் உருவாகி இருக்கின்றது.
அது மூடர் கூட்டத்தின் கருத்து. நாட்டுப் பற்றிற்கும் தேசத்தின் மீது மரியாதையும் பிரியமும் இருப்பதற்கும் நாட்டை ஆளக் கூடிய அரசாங்கத்தை விரும்புவதற்குத் தொடர்பு கிடையாது. நாட்டைநேசிக்க வேண்டுமோ தவிர அரசாங்கத்தை நேசிக்கத் தேவை இல்லை.
அதே போல மத்திய அரசாங்கம் எனப் பயன் படுத்தக் கூடிய வார்த்தையே தவறானது. ஆங்கிலத்தில் UNION GOVERNMENT என்றும் தமிழில் நடுவண் அரசாங்கம் என்றும் தான் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்குஉயர் நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ நடுவண் அரசை எதிர்த்து வழக்கு தொடரும் போது “தொடருபவர் VS UNION OF INDIA” என்று தான் வழக்குப் பதிவு செய்யப்படும்.
நியாயமாக நடுவண் அரசாங்கம் செய்ய வேண்டிய கடமைகள் பாதுகாப்புத் துறை, வெளியுறவுத்துறை (அதிலும் இங்கு இருக்கக் கூடிய தேசிய இனங்களின் கருத்தை மனதில் பதிவு செய்து கொண்டு (உதாரணத்திற்கு மேற்கு வங்காளம் – பங்களாதேஷ், தமிழ்நாடு -இலங்கை, இந்திய நாட்டில் இருக்கும் பஞ்சாப் – பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப், அரேபியா நாடுகள் – கேரளா, போன்ற ஒரே தேசிய இனங்கள் வாழக்கூடிய, கலாச்சார தொடர்பு, வணிகதொடர்பு, ஆகியவை மனதில் கொண்டு வெளியுறவுக் கொள்கை இருக்க வேண்டும்), அணுசக்தி , பாதுகாப்பிற்குத் தேவையான (பாராளமன்றத்தால் உருவாக்கப் பட்ட) தொழிற்சாலைகள், மத்திய புலனாய்வு துறைகள் ஐக்கிய நாட்டுச் சபையில் இந்திய நாட்டின் கொள்கைகளை எடுத்துரைப்பது இதேபோன்ற கடமைகள். அதை விட்டுவிட்டு பெருமுதலாளிகளுக்கு நாட்டை கூறுபோட்டு விற்பது நடுவண்அரசாங்கத்தின் கடமை கிடையாது.
இதைப்பற்றியெல்லாம் பொதுமக்கள் விழிப்புடன் பேச ஆரம்பிக்கும்பொழுது இல்லாத பொய்யையும் புரட்டையும் கூறி பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறது ஒரு கும்பல்.
நாட்டை நேசிக்க வேண்டுமோ தவிர நாட்டை ஆளக்கூடிய அரசாங்கத்தை நேசிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அரசாங்கம் என்பது மக்களாட்சியில் தேர்ந்தெடுக்க பட்ட குறிப்பிட்ட காலத்திற்கு எங்களைஆளுங்கள் எங்களுக்குத் தேவையானதை செய்யுங்கள் என்பதற்காக, நமக்காகப் பதவியில் அமர்த்திவைக்கப் பட்ட ஒரு அமைப்பே.
என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அரசாங்கத்திற்கு அங்கீகாரம் கொடுக்கப் படவில்லை. இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தினை பற்றியும், அரசியல், சட்டமன்றம் பற்றியும், பாராளமன்றத்தை பற்றியும் நீதித்துறை பற்றியும் சட்ட சபை பற்றிய புரிதலும் விவாதங்களும் தேவை.
குடியியல் (CIVICS) எந்த விதமான புரிதல் இல்லாமலும், தெளிவான புரிதல் இருந்தும், ஒரு கூட்டம் நம்மைத்திசை திருப்ப முயற்சித்துக் கொண்டு இருக்கின்றது.
நம்மை ஒரேவிதமான மக்களாக மாற்றுவதற்குப் பல ஆயிரம் வருடங்களாக முயற்சி நடைபெற்றுவருகின்றது.
ஒற்றுமையாக இருப்பதற்கும் ஒரே விதமாக இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது.ஒற்றுமையாக இருப்பதற்கு முயற்சிக்க முடியுமோ தவிர, ஒரே விதமாக இருக்க முடியாது.
இந்திய குடியரசு 1947 பின் சந்திக்க கூடிய மிகப்பெரிய சவால் இன்று தான். மாநிலங்களும் கூட்டாட்சியும் அழிப்பதற்கான ஒரு பெரிய யுக்தியும் முயற்சியும் இன்று நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. இது பல வருட காலமாக பல மாநிலங்களில் நடந்து வந்ததே.
நமக்குத் தமிழகத்தில் அது பழக்கம் இல்லாத ஒரு விடயமாக இருந்த காரணத்தினால், திரு. ஓமாந்தூரார், திரு.காமராஜர், திரு.அண்ணா, கலைஞர், திரு. எம். ஜி. ஆர், அம்மா என ஆளுமை பெற்ற தலைவர்கள் ஆண்ட காரணத்தினால் இப்பொழுது நாடாகும் கேலிக்கூத்து நம்மைக் கொந்தளிக்க வைக்கின்றது.
அதே போல் ஆந்திராவில் திரு. N.T ராமராவ் அரசியல் களத்தில் வரும் வரை தெலுங்கு மொழியின் பெருமைபற்றியும் ஆளுமை பற்றியும் பெரிதாகப் பேசப்படவில்லை.
கர்நாடகத்தில் திரு. ராமகிருஷ்ணா ஹெகடே, திரு.தேவகௌடா போன்றோர் தான் டெல்லி நடுவண் அரசாங்கத்தை எதிர்த்து அரசியல் செய்தவர்கள்.
ஆதலால் தான் தேசிய ஊடகங்கள் இது போன்ற கட்சிகளை, அமைப்புகளைத் தலைவர்களை கேவலமாகவே சித்தரித்து அவர் கன்னட வெறியர், தமிழ் வெறியர் என்று அவர்களை ஒரு பிரிவினைவாதி போல் சித்தரித்து காட்டக்கூடிய போக்கு நிலவி வருகின்றது.
இன்று கூட்டாட்சிமுறையைக் காப்பாற்ற வேண்டிய கடமை முதலமைச்சர்களாக இருக்கக் கூடிய செல்வி . மம்தா பனர்ஜீ, திரு.நவீன்பட்நாயக், திரு. சந்திர சேகர் ராவ் திரு. குமாரசாமி, திரு.சந்திரா பாபு நாயுடு, திராவிட முன்னேற்றக் கழகம் , எதிர்க் கட்சி தலைவர் திரு.மு. க ஸ்டாலின், திரு. சரத் பவார், பாராளமன்ற உறுப்பினர் திருமதி. சுப்ரியா சுலே, போன்றோர் இதனை முன்னெடுத்து கூட்டாட்சியை நிலைநிறுத்த வேண்டும்.
வளமான பலமான மாநிலங்கள் ஒரு வளமான இந்திய நாட்டை உருவாக்கும்.
1970 களின் நெருக்கடி நிலை (மிசா) (MISA) இந்தியா நாட்டின் ஜனநாயகத்தில் ஒரு கருப்பு சரித்திரம் ஆகும். ஆனால் இன்று நடப்பது செல்வி. மம்தா பனர்ஜீ கூறியது போல், தீவிர நெருக்கடி நிலை (SUPER EMERGENCY) ஆகும்.
திருமதி. இந்திராகாந்தியின் தீவிர நெருக்கடி நிலையின் போது ஊடகங்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். அரசு எதை அச்சிடவேண்டும் என்று கூறியதோ அதை எதிர்த்து முழு பக்கம் வெறுமையாக அச்சிட்டு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அதே போல உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றங்களும் நெருக்கடி நிலையைக் கடுமையாக எதிர்த்து நின்றது.
ஆனால் இன்றோ உலகத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த நீதிமன்றம் இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றம் ஆகும். உச்ச நீதிமன்றத்தின் ஓர் தீர்ப்பு 130 கோடி இந்தியர்களின் வாழ்வைத் தீர்மானிக்கக்கூடியது. அப்படி இருக்கக் கூடிய சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் நான்கு உயர் நீதிபதிகள், ஊடகங்களை அழைத்து உச்ச நீதிமன்றத்தின் போக்கினை கண்டித்து “சரித்திரம் தங்களை தவறாகப்புரிந்து கொள்ளக் கூடாது ஆதலால் நாங்கள் தன்னிலை விளக்கம் கொடுக்கின்றோம்” என்றனர்.
இப்படி ஒரு சம்பவம் உலகத்திலேயே ஜனநாயக நாட்டில் எங்கும் நடந்தது இல்லை. நீதித்துறை, சட்டமன்றம், பாராளுமன்றம் அனைத்தும் குழி தோண்டிப் புதைக்க படுகின்றன.
இதை எல்லாம் புரிந்து கொண்டு பல சில காரணங்களுக்காக பொய்யையும் புரட்டையும் கூறி தேச பக்தி என்ற பெயரில் நாம் வஞ்சிக்கப் படுகின்றோம்.
தேசத்தின் மீது பற்று இருக்கலாம், அரசின் மீது பற்று இருக்கு வேண்டிய அவசியம் இல்லை. ஒற்றுமையாக இருப்பது நல்லது. ஆனால் ஒரே மாதிரி இருக்க முடியாது.
நாம் மரபணு மாற்று விதைகள் கிடையாது. நாம் நாட்டு விதைகள் !!
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.”
– கார்த்திகேய சிவசேனாபதி
24 /08 /2018