எனது பார்வை…
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், லண்டன் – 12/09/2019
திரு. நாகானந்த் சரவணன், தலைவர் ஆக்ஸ்போர்டு இந்தியா சொசைட்டி, அவர்களின் அழைப்பை 12 -09 -2019 அன்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சென்று இருந்தேன். ஆக்ஸ்போர்டு இந்தியா சொசைட்டி சுமார் 2000 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பு.
சேலத்தைச் சேர்ந்த திரு. சரவணன், சென்னை கிண்டி, அண்ணா பல்கலைக்கழகத்தின், பொறியியல் கல்லூரியில், பொறியியல் படிப்பை முடித்து தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார். அவர் ஜெர்மனியில் இன்டர்ன்ஷிப், பிரான்சில் முதுநிலை பட்டம் மற்றும் இப்போது ஆக்ஸ்போர்டில் முனைவர் பட்டம் பெற்றவர். உலோகவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். சுமார் 65% வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
நமது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளின் கீழ் துறைகள் வரும்,. ஆனால் நமது பல்கலைக்கழக கல்வி முறையைப் போலல்லாமல் ஆக்ஸ்போர்டில் துறைகள் கல்லூரியோடு இணைந்து செயல்படுகின்றது. சுமார் 30 மேற்பட்ட கல்லூரிகள் இங்கு உள்ளன.
ஒருவர் புவியியல் மற்றும் இயற்பியல், கணினி அறிவியல் மற்றும் வரலாறு என அவர் அவர் விருப்பத்திற்கு இயைந்து படிக்க முடியும்.
ஆக்ஸ்போர்டுக்கு பல்கலைக்கழகம் சுமார் ஆயிரம் வருடம் பழைமை வாய்ந்தது. திருமதி இந்திர காந்தி, முனைவர் மன்மோகன் சிங், போன்றோர்
ஆக்ஸ்போர்டின் முன்னாள் மாணவர்களில் சிலர்.
இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லர் ஆக்ஸ்போர்டுக்கு குண்டு வீசவில்லை என்று கூறப்படுகிறது, ஏனெனில் இங்கிலாந்தின் தலைநகராக அதை உருவாக்கி இங்கிருந்து ஆட்சி செய்வதே அவரது நோக்கம்.
மேலும் தமிழகம், சிவகாசியைச் சேர்ந்த திரு. கணேஷ் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர்.
இங்கு அமைந்து இருக்கும் நூலகம் ஒரு அற்புதமான புதையல். இங்கிலாந்தில் அச்சிடப்படும் அனைத்து புத்தகங்களும் ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகங்களுக்கு நகல் அனுப்பப்படுவது வழக்கமாக உள்ளது, என்பது இந்நூலகத்தின் தனிச் சிறப்பு.
இந்நாளின் இன்னும் ஓர் சுவாரசியம்,
திருச்சியைச் சேர்ந்த திருமதி ராஜி நடத்தும் ஒரு தமிழ் உணவகத்தில் மதிய உணவுக்காக அவரின் அழைப்பை ஏற்றுச் சென்றது. அவர் லண்டனுக்கு மாணவராக வந்து ஆக்ஸ்போர்டில் குடியேறி உள்ளார் . சுவையான தமிழ் உணவுகளாலும் அன்பான விருந்தோம்பலில் எங்கள் மனங்களைக் கவர்ந்தார்.
வருங்காலங்களில் ஆக்ஸ்போர்டில் உள்ள மாணவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்.
– கார்த்திகேய சிவசேனாபதி
12-09-2019