நடு நிலை
சில சமயங்களில் நடுநிலை என்ற வார்த்தை சிலரால் பயன்படுத்தப் படுகின்றது.
நடு நிலையாக யார் இருக்கிறார்கள் ?
எதற்காக இருக்கிறார்கள் ?
உதாரணமாகத் திரை உலக பிரபலங்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் எந்த அரசியல் கட்சிகள் குறித்தோ கொள்கைகள் குறித்தோ எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க மாட்டார்கள். அனைவர்க்கும் நல்லவர்களாய் இருப்பார்கள். எல்லா அரசியல் தலைவர் மற்றும் கட்சியினர் விழாக்களுக்கும் செல்வார்கள். எந்த வித கொள்கையையும் பெரிதாகப் பேச மாட்டார்கள்.
காரணம் என்னவென்றால்,
உதாரணமாக ஒரு நடிகரோ / நடிகையோ ஒரு கட்சி அல்லது கொள்கையினை பற்றி எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ கருத்து தெரிவித்தால் ,
எதிர்த்துப் பேசும் பொழுது அந்த கட்சியின் கொள்கையின் ஆதரவாளர்கள், மக்களின் ஆதரவினை அவர்கள் இழக்கிறார்கள்.
அதே போல் வேறு ஒரு கொள்கையின் ஆதரவாகவோ அல்லது எதிர்த்துப் பேசும் போது அந்த கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் மக்களின் ஆதரவினை இழக்க நேரிடும்.
ஏன் எதிர்ப்பை பெற வேண்டாம் என்று நினைக்கிறார்கள் ?
அவர்களுக்கு அவர்களின் திரைப்படம் பொருளாதார ரீதியிலான வெற்றியைப் பெற வேண்டும். எல்லா கொள்கை மற்றும் கட்சியை சார்ந்தோர் திரைப்படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். அதனால் மட்டுமே அவர்களின் வர்த்தகம் சீருடன் சிறப்பாய் அமையும்.
இது வர்த்தக ரீதியான பொருளாதார ரீதியான நடுநிலையோ தவிர உண்மையான நடுநிலை கிடையாது.
இதே போல் தான் சிலர் நடுநிலையாக இருப்பது போல் இருக்கிறார்கள். அவர்களின் தொழில், நிறுவனம், ஆகியவற்றின் வர்த்தகம் பெரிது.
கொள்கை அன்று.
நடக்கக் கூடிய அநீதியைப் பற்றி கவலை இல்லாமல், குரல் எழுப்பும் தைரியம் இல்லாமல், அல்லது பொதுவாகத் தன்னை பற்றி மட்டுமே கவலைப்பட்டு சுயநலமாய் தன் கால்களுக்கு மட்டுமே பூ போட்டு பூசை செய்யும் கூட்டமாக இருப்பார்கள் .
இவர்கள் அடுத்தவரை நடுநிலையோடு இருங்கள் என்று கூறுவது வேடிக்கையானது.
இவர்களின் நடுநிலை வர்த்தக ரீதியிலான நடுநிலை என்றே அறியப்பட வேண்டும்.
இவர்களை நடுநிலைவாதிகள் என்று கணக்கில் கொள்ள வேண்டிய, அவசியம் அன்று.
– கார்த்திகேய சிவசேனாபதி
10-04-2019