தமிழகம் கேரளா போன்ற மாநிலங்களில் இருக்கக் கூடிய பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்களை நினைத்தால் மிகவும் பரிதாபமாக இருக்கின்றது, பொதுவாகத் தமிழகத்திலே நாம் இதுவரை கண்ட, பழகிய அரசியல் – முற்போக்கு சிந்தனை கொண்ட, முன்னேற்றம், பொருளாதாரம், சமூகநீதி, கல்வி,சமூகவியல், மருத்துவம் போன்ற விடயங்களைப் பற்றி 90% மையமாகக் கொண்டது. 10% தனிமனித தாக்குதலும் இருந்து உள்ளது.
இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் அரசியலில் ஐயா திரு. காமராஜர் காலம் முதல் 2016 ஆம் ஆண்டு வரை , நாங்கள் கிராமங்களுக்கு, பள்ளிக்கூடங்கள் கட்டுவோம், எல்லா கிராமங்களுக்கும் சாலைகள் அமைப்போம், எல்லா கிராமப்புறங்களிலும் மருத்துவ வசதி ஏற்படுத்தித் தருவோம், (primary health centre), ஐந்து கிலோமீட்டர் தூரம் ஒரு அரசு மருத்துவமனைகள் அமைக்கப்படும் , கால்நடைகளுக்கு மருத்துவமனை, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி, ஒரு பொறியியல் கல்லூரி, தொழிற் கல்லூரிகள் , கலை மற்றும் அறிவியல் கல்லூரி என மக்களுக்கான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது.
இதைத் தான் மக்களும் எதிர்பார்த்தனர். அரசியல்வாதிகளும் மருத்துவ கொள்கை, தகவல் தொழில் நுட்ப கொள்கை, தொழிலாளர் நலன், தொழிற்சாலைகள் மேம்பாடு, ஏற்றுமதி கொள்கை, பின்னலாடை, மஞ்சள் ஏற்றுமதி, விவசாயிகள் நலன், நெசவு தொழில் சார் கொள்கைகள்m, SIPCOT அமைப்பது போன்ற விடயங்களை எல்லாம் ஆராய்வதை நாம் தொடர்ந்து சந்தித்து வந்தோம்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும், அம்மாவட்டத்தின் பொருளாதாரம், நிலம் , அரசியல், சமூகவியல் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த கொள்கைகளைப் பற்றி பரப்புரைகளைக் கேட்டுப் பழகிய நாம், இன்று பாரதிய ஜனதா கட்சியின் மத வெறி அரசியலை, “மதத்திற்கு திடீர் ஆபத்து வந்து விட்டது …”
என்பது தமிழர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
என்ன மதத்திற்கு ஆபத்து ??ஆயிரக்கணக்கான வருடங்களாகக் குலதெய்வங்களை வழிபாடு செய்து, கருப்பராயனுக்குக் கெடா வெட்டி, மாரியம்மாளுக்குப் பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செலுத்தி, அருகில் இருக்கும் பழனியோ, திருப்பரங்குன்றமோ, திருத்தணியோ, பழமுதிர்சோலையோ , என முருகன் கோவிலுக்குச் சென்று நமது கிராமப்புறங்களில் இருக்கக் கூடிய ஈஸ்வரன் கோவிலுக்கும் பெருமாள் கோவிலுக்கும் சென்று வழிபாடு நடத்தி வரும் நிலையில் இருக்கும் நமக்கும் நமது மதத்திற்கும் என்ன பிரச்சனை வந்து விட்டது ??