சேலம் சென்னை பசுமை வழிச்சாலை
தமிழக அரசு மற்றும் மாண்புமிக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ஒரு சாமானியனின் சில கேள்விகள்.
அய்யா, தாங்கள் பல வருட காலம் பாராளமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, தமிழக அமைச்சராக, தற்போது தமிழக முதல்வராக, பொறுப்பேற்றுள்ளீர்கள்.உங்களுக்கு தெரியாதது இல்லை.
சேலம் சென்னை இடையே ஏற்கனவே, மூன்று சாலைகள் உள்ளன. அவை,
- சேலம் , ஆத்தூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம்,செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை.
- சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, ஸ்ரீபெரம்பதூர், சென்னை.
- சேலம், அரூர் ஊத்தங்கரை வழியாக சென்னை அடையலாம்.
முதலில் குறிப்பிட்ட இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் சில பகுதிகள், குறிப்பாக, சேலம் முதல் உளுந்தூர்பேட்டை வரை செல்லும் பகுதிகளில் இன்னும் இரண்டு வழி சாலையாகவே உள்ளது.
அதனை நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கு ஏற்கனவே தேசிய நெடுசாலைத்துறை நிலங்களை கையகப்படுத்தி வைத்துள்ளனர்.
எப்பொழுது வேண்டுமானாலும் அதன் வேலைகளை தொடங்கலாம் .
வேண்டும் என்றால், அந்த சாலைகளை விரிவுபடுத்தினாலும் ஒரு பூமியின் சொந்தக்காரருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் முன்பகுதியை கையகபடுத்தி அவர்களுக்கு அதற்கான இழப்பீட்டை வழங்க முடியும்.
அதே போல் தர்மபுரி கிருஷ்ணகிரி சாலையிலும் நிலங்கள் கையக படுத்தி தயார் நிலையில் வைக்க பட்டுள்ளது.
எப்பொழுது வேண்டுமானாலும் அதன் பணிகளையும் துவங்கலாம். இவற்றை நான்கு வழி சாலையாகவோ எட்டு வழி சாலையாகவோ மாற்றுவதற்கு எந்த சிக்கலும் ஏற்படாது.
அதே போல் இருக்கக்கூடிய அரூர் ஊத்தங்கரை சாலையை விரிவுபடுத்த நிலங்களை கையகப்படுத்தி இருக்கக்கூடிய மரங்களை வெட்டாமல் பசுமை வழி சாலையாக ஒரு முன்னுதாரணமாக அமைக்கலாம்.
நீங்கள் 2016 முதல், முதல்அமைச்சராக இருந்த காலகட்டத்தில் மரங்களை கூட வெட்டாமல் உண்மையான பசுமை வழிச்சாலை அமைத்த முன் உதாரணமாக, ஓர் முன்னோடியாக , “அசோகன் மரங்களை நட்டான்” என்பதை போல அழியா பெயரும் புகழும் வாங்கி இருக்கலாம்.
அதை எல்லாம் விட்டு விட்டு, 27 கிலோமீட்டர் குறைப்பதற்காக பத்தாயிரம் கோடி செலவு செய்கின்றோம், பதினாறாயிரம் கோடி செலவு செய்கின்றோம் என கூறி, நாற்பதாயிரம் மேல் இருக்க கூடிய குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தி , சர்வாதிகாரி கூட செய்யாததை, மன்னர் ஆட்சியில் கூட நடைபெறாத கொடுமைகளை ஜனநாயகம் என்ற பெயரிலே அரங்கேறுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பல்லுயிர் ஓம்புதல் (UNITED NATIONS CONVENTION FOR BIOLOGICAL DIVERSITY ) என்ற ஒப்பந்தத்தில் இந்திய நாடு 1992 ஆம் வருடம் கையெழுத்திட்டுள்ளது.
அதன் படி 2002 ஆம் வருடம் (NATIONAL BIODIVERSITY ACT) தேசிய பல்லுயிர் பாதுகாப்பு சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.
அதன்படி (ENVIRONMENT IMPACT ASSESSMENT) சுற்றுச்சூழலுக்கு என்ன என்ன பாதிப்பு ஏற்படும், என பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய வாய்ப்பினை வழங்கி இருக்க வேண்டும்.
அதே போல (STAKE HOLDER CONSULTATION) இந்த பூமியினை இந்த திட்டத்தை அமல் படுத்த உள்ளோம். இதற்கு விருப்பு வெறுப்பு தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம் என கால அவகாசம் தந்து இருக்க வேண்டும்.
அதற்கு பின் எப்பொழுதும் போல் செய்தி தாளில் விளம்பரம் கொடுத்து இந்த பூமியில் இந்த SF என்னை கையக படுத்த உள்ளோம்.
இதற்கு இவ்வளவு இழப்பீடு வழங்க படும், என தெரிவித்து இருக்க வேண்டும்.
இப்படி எதையும் பின்பற்றாமல் ஒரு காட்டு மிராண்டியை போல் காவல் துறையினரை ஏவி அராஜகத்தை கட்டவிழ்த்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
இந்த சாமானியனுக்கு கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லை என்ற எண்ணத்திலே நீங்கள் செயல் பட்டு கொண்டு இருப்பது உங்களுக்கும், உங்கள் கொடுங்கோல் ஆட்சிக்கும் செங்கோல் தவறிய ஆட்சிக்கும் அழிவு காலம் நெருங்கி, என்பதை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
தமிழக சரித்திரத்திலே இனியாவது நல்மதிப்பை, நண்பெயரை, எடுக்க முயற்சி செய்யுங்கள்.
இதுவரை NEET , நெடுவாசல், தூத்துக்குடி, போன்ற உங்கள் மரபில் ஏற்பட்டுள்ள அவப்பெயரை சிறிதளவேனும் திருத்தி எழுதுவதற்கு வாய்ப்பாய், இந்த பசுமை வழி சாலையினை கண்டித்து செய்தியாளர் சந்திப்பை ஏற்படுத்தி, என்னால் எனக்கும் என் இன மக்களுக்கு துரோகம் செய்ய முடியாது.
இந்த பசுமை வழி சாலையை நான் ரத்து செய்கின்றேன் என்ற அரசாணையை வெளியிடுங்கள்.
அதை விடுத்து இதை பற்றி பேசாமல், இதனால் லாபம் வருகின்றது என்று கூறி கொண்டு இருக்காதீர்கள்.
– கார்த்திகேய சிவசேனாபதி