அன்புள்ள முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களே,

நேற்று திருப்பூர் மாவட்டத்தில் நீங்கள் உரையாற்றிய பொழுது எங்கள் பல ஆண்டுகள் கோரிக்கையான காங்கயம் காளையின், உருவச் சிலையைக் காங்கய காவல் நிலையத்திற்கு அருகே , கோவை – கரூர் – சென்னி மலை- தாராபுரம் சாலைகளின் நடுவே அமைக்க உறுதி அளித்த உள்ளீர்கள் , மகிழ்ச்சி !!

ஆனால் இந்த பாரம்பரிய கால்நடையை அழிப்பதற்கு உங்கள் அரசாங்கம் கொண்டுவந்த Bovine Breeding Act 2019 , இதனைத் தொடர்ந்து தலைவர் தளபதி அவர்கள், முன்னாள் அமைச்சர் திரு. பிச்சாண்டி அவர்கள், முன்னாள் அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள், மற்றும் நானும் இதனை எதிர்த்து குரல் கொடுத்து உள்ளோம். இதற்கு இன்று வரை எந்த விதமான பதிலை தாங்களும், தங்கள் தலைமையில் உள்ள அரசும், கால்நடைத் துறை அமைச்சரும் தரவில்லை.

பாரம்பரிய கால்நடைகளை, குறிப்பாகக் களைகளை அழிக்கக் கூடிய இந்த சட்டம், நடுவண் அரசின் – திரு. மோடி அரசின் தூண்டுதலின் பேரில் இயற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை இனப் பெருக்கச் சட்டம் 2019. – “TAMILNADU BOVINE BREEDING ACT 2019”.

BOVINE – மாடு, எருமை, போன்றவற்றைக் குறிக்கக் கூடிய ஆங்கில சொல்.

இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள்,

1 . வெளிநாட்டு மாட்டு இனங்கள் (Holstein-Friesian Jersey போன்ற மாடுகள்) வைத்து இருப்பவர் யாரும் காளைகள் வைத்து இருக்கக் கூடாது.
விவசாயிகள் பூச்சி காளை வைத்து இருக்கத் தடை செய்யப்பட்டு மாடுகளுக்குச் சினை ஊசி தான் செலுத்தப்பட வேண்டும், என்னும் நிலை உருவாக்கப்படும்.

2. சினை ஊசி,
யார் தயாரிக்க முடியும் ?
எப்படித் தயாரிக்க முடியும் ?
சினை ஊசி தயாரிப்பவர்கள் அரசின் அமைப்பின் கீழ் பதிவு செய்து இருக்க வேண்டும். இவ் அமைப்பு அவர்களைச் சோதனைகளுக்கு உட்படுத்த முழு அதிகாரம் வழங்கப் படும், என்றெல்லாம் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்கின்றது.

3 . இதன் நோக்கம், ஆயிரக்கணக்கான கோடிகள் அடங்கிய வர்த்தகம் இதில் அடங்கி உள்ளது. தமிழகத்தில் 80 லட்சம் மாடுகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் வருடம் ஒருமுறை மாடு சினை பிடிக்க 40 ரூபாய் பெற்று அரசு ஊசிகள் தந்து வருகின்றது.

இது தனியார் வசப்படுத்தினால் குறிப்பாகக் காளைகள் பிறக்காத ஊசிகள் இப்பொழுது வந்து உள்ளது. அவற்றினை பிரபலப்படுத்த ஒரே ஒரு தனியார் அமைப்பிற்குக் கொண்டு செல்ல இவ்வேலைகள் நடை பெறுகின்றது.

கூடிய விரைவில் சினை ஊசி 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விற்கக் கூடியதாக மாறும். 80 லட்சம் மாடுகளுக்கு 2000 ரூபாய் எனில் கணக்கு வைத்தால் இதில் எவ்வளவு பெரிய வர்த்தகம் அமைந்து உள்ளது என அறிய முடியும்.

அடுத்து,

பாரம்பரிய கால்நடை. அவற்றிலும் பெரும் வில்லங்கத்தை உருவாக்குகின்றனர். 8000 வருட காலமாக இந்த மாட்டு இனங்களைப் பராமரித்து வந்த மக்களிடம் இருந்து இந்த கால்நடைகளைப் பிரித்து எடுப்பதற்கான முயற்சி தான் இது.

பூச்சி காளை வைத்து இருப்பவர்கள், அரசாங்கத்திடம் பூச்சி காளையை / பொலி காளையை அரசாங்கத்தின் புதிதாக அமைக்கக் கூடிய அமைப்பின் கீழ் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர்.

எதற்காக இந்த சட்டத் திருத்தங்கள் ?

சிறு குறு விவசாயிகளின் சொத்து கால்நடை. அவர்களின் வாழ்வாதாரங்களைக் கெடுத்து அவர்கள் சொத்தை பிடுங்கி யாருக்குத் தாரை வார்த்து வருகிறீர்கள் என நன்கு அறிவோம்.

இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முன், விவசாயிகள் அழைத்து (STAKE HOLDER CONSULTATION ) கலந்தாய்வுக் கூட்டம் நடத்திய பின்னரே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்க வேண்டும் .

1 . எதற்காக இப்படி ஒரு சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது ?

2 . அந்த சட்டத்தில் குறிப்பாக “ARTIFICIAL INSEMINATION ” குறித்து நிறையச் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்காகத் தனியே ஒரு அமைப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. எதற்காகப் புதிதாக ஒரு அமைப்பு ??

ஏற்கனவே தமிழகத்தில் கால்நடைத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. மேலும் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட TANUVAS – (Tamil Nadu Veterinary and Animal Sciences University ) மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அரசு அமைப்பின் கீழோ அல்லாது கால்நடைத் துறை கீழ் இந்த சட்டம் அமல்படுத்தப்படலாம் அல்லவா ? .

அரசு செலவைக் குறைக்க வேண்டும் என்று அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதில் சிக்கனம் காட்டும் நீங்கள் அரசின் வீண் செலவில் புதிதாக ஒரு அமைப்பை உருவாக்குவது ஏன் ??

இதற்கெல்லாம் பதில் அளிக்காமல், வெறும் சிலையை மட்டும் வைத்து பாரம்பரிய கால்நடையை எப்படிக் காப்பாற்றப் போகிறீர்கள் ??

உயிர் உள்ள காளைகளை அழித்து விட்டு காங்கயம் காளைகளுக்கான சிலையை வைப்பது ஒரு குறியீடாக (Museum piece) மட்டுமே அமையும்.

இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் தமிழகத்தின் பாரம்பரிய கால்நடையின் அழிவிற்கு, நீங்களே பொறுப்பு ஆவீர்கள் !!

– கார்த்திகேய சிவசேனாபதி
07-11-2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *