திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல குக்கிராமங்களில் விவசாயம்தான் வாழ்வாதாரம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய கடும் வறட்சியால் விவசாயம் நொடித்துப்போக, விவசாயிகள் செய்வதறியாது திகைத்தனர்.
இதனால், திருப்பூர் மற்றும் காங்கயத்தில் உள்ள பின்னலாடை நிறுவனங்களுக்கும், அரிசி மற்றும் எண்ணெய் ஆலைகளுக்கும் கூலி வேலைக்குச் சென்று, குடும்பத்தைக் காப்பாற்றினர். மக்களுக்குக் குடிக்கவே தண்ணீர் இல்லாத சூழலில், உழவின் உயிரான கால்நடைகளுக்கு எப்படி தண்ணீர் கிடைக்கும்? இதனால், பலரும் கால்நடைகளை சந்தைகளில் விற்றுவிட்டனர். இதற்குப் பிறகே, அப்பகுதியில் நிலவும் வறட்சியின் கோரத்தை அனைவரும் உணரத் தொடங்கினர்.
வறட்சியை சமாளிக்கும் வகையில், வெள்ளகோவில் பகுதியில் உள்ள, சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி, வள்ளியரச்சலில் ஊரில் 4.30 ஏக்கரில், சுமார் 20 அடி ஆழத்தில் இரண்டு குளங்களை வெட்டினார். ஆண்டுதோறும் கிடைக்கும் கீழ்பவானி பாசன நீர் மூலம் இந்தக் குளங்கள் நிரப்பப்படுகின்றன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீர் தேங்குவதால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உயருகிறது. வாடிய பயிர்கள் மெதுவாக உயிர்பிடித்து, துளிர்விடுகின்றன. இது விவசாயிகளின் மனங்களிலும் படரவே, நிறுவனங்கள் மற்றும் ஆலைகளில் கூலி வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, மீண்டும் விவசாயத்துக்குத் திரும்புகின்றனர்.