தமிழ் மொழியின் சிறப்பையும், தொன்மையையும் கொண்டே தமிழன் என்பவன் யார் என வரையறுக்க வேண்டும். தமிழின் தொன்மையையும் சிறப்பையும் அதன் உயர் தனிச் செம்மொழி நிலையையும் மறுக்கும் யாரும் தமிழர் என்று ஏற்க முடியாது.
எம்மொழியையும்விட தமிழ் தாழ்ந்தது என்று கூறுவோரும் தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் நலம் கருதுவோர் அல்ல. எனவே “தமிழ் என்னும் உயர்தனிச் செம்மொழி, இப்புவியில் எம்மொழிக்கும் தாழ்ந்தது அல்ல” எனக் கருதுவோரே, அவர் எங்கு பிறப்பினும் எம்மொழி பேசினும், தமிழர் என்று கருதுவோமாக.
அதே போல், தமிழைவிடப் பிறிதொரு மொழியை உயர்வெனக் கருதுவோர், அவர்கள் எங்கு பிறப்பினும் எந்த மொழி பேசினும், தமிழர் அல்ல என்றும் முடிவு செய்வோமாக.
பிறப்பின் அடிப்படையில் மட்டுமே ஒருவரது தகுதியை, திறமையை, பண்பை முடிவு செய்யும் இழிசெயலைத் தமிழ் ஒருபோதும் ஏற்காது. எனவே, பிறப்பின் அடிப்படையில் மட்டுமே ஒருவரைத் தமிழர் என்று கூறுவது தமிழ் மொழிக்கே எதிரானதாகும்.
-கார்த்திகேய சிவசேனாபதி
28-09-2019