ஒரு தொலைபேசி உரையாடல் !!
மாப்பிள்ளை வணக்கமுங்க நான் டாக்டர் …… , நல்ல இருக்கீங்களா ??
வணக்கமுங்க மாமா, நல்ல இருக்கேன், நீங்க நல்ல இருக்கீங்களா ??
நல்லா இருக்கேன் மாப்பிள்ளை, அதுங்க மாப்பிள்ளை உங்க பேட்டி அண்ணாமலைக்கு எதிரானத பார்த்தேன் . அவரும் நம்ம சமுதாயத்தைச் சேர்ந்தவர். நாளைக்கு முதலமைச்சராக வருவதற்கான வாய்ப்பு இருக்கு .
எந்த மாநிலத்துக்கங்க மாமா ???!!
……….. (சிறு அமைதிக்குப் பின் ) , நம்ம தமிழ்நாட்டுக்கு தானுங்க மாப்பிள்ளை. என்னதான் இருந்தாலும் உங்கள மாதிரி அவரால பேச முடியாது. நம்ம சமுதாயத்தைச் சேர்ந்தவர் மேலுக்கு வந்தா நம்ம சமுதாயத்துக்கு தானே மாப்பிள்ளை நல்லது.
அப்போ நான் யாருங்க மாமா??
பெத்தாம்பாளையம் பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கிய நாள் ராபின்சன் பூங்காவில் தலைமை ஏற்றவர். அவருடைய தம்பி திரு. குப்புசாமி IPS , திரு. நல்லதம்பி சர்க்கரை மன்றாடியார், திரு. ராஜ்குமார் மன்றாடியார், என அனைவரும் நம் சமூகம் தானுங்க மாமா.
அதுக்கும் மேல பழைய கோட்டை தளபதி திரு. அர்ஜுனன் அவர்கள், தன்னுடைய 18 வயதில் திராவிடர் கழக பொருளாளராக இருந்துள்ளார்.
அவர்களின் மரணத்திற்குப் பெரியார் அவர்கள் எழுதிய இரங்கற்பாவை இன்று வரை நெஞ்சை உருகச் செய்வது. அவர் கொங்கு சமூகம் இல்லீங்களா மாமா ??
இவர்கள் அனைவரும் இல்லாமல் என் தாத்தா காலம் சென்ற மிசா குட்டப்பாளையம் சாமிநாதன் முன்னாள் வெள்ள கோவில் சட்டமன்ற உறுப்பினர் அவர் கொங்கு சமூகம் தானுங்களே மாமா ??
இப்படி சொல்லிட்டே போகலாம் மாமா.
திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்யவில்லை கொங்கு சமுதாயத்துக்கு ??
1 . பிற்படுத்தப்பட்டோர் சலுகை வழங்கியது யார் ??
2. நில உச்ச வரம்பு சட்டம் இயற்றி விவசாய நிலத்தினை பங்கி அனைத்து மக்களுக்குக் கிடைக்கச் செய்தது யார் ??
3. இலவச மின்சாரம் வழங்கி விவசாய மக்கள் பயன் பெறச் செய்தது யார் ??
4 . விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்தது யார் ??
5 . கீழ் பவானி பாசன வாய்க்கால் தண்ட தீர்வு விலக்கியது யார் ??
6 . தென்னை நல வாரியம் அமைத்தது யார் ??
7 . மண்டல் ஆணையம் பரிந்துரையை அனைத்து நடுவண் அரசு கல்லூரிகளான IIM , IIT , என MINISTRY OF EDUCATION – HRD தலைமையின் கீழ் வரும் அனைத்து நிறுவனங்களில் அமல்படுத்தி சமூகநீதியால் , நாம் அனைவரும் உயரப் பாடுபட்டது யார் ??
8. அனைத்து நடுவண் அரசு வேலைவாய்ப்பிலும் மண்டல் ஆணையம் பரிந்துரைப்படி இட ஒதுக்கீடு வழங்கப் பாடுபட்டது யார் ??
கொங்கு வெள்ளாளர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் வழங்கியதைத் தொடர்ந்து நடந்த பாராட்டு விழாவில்
“டாக்டர் சுப்பராயன் சாதிக்காததை, சி. சுப்பிரமணியம் செய்யாததை என்னாலும் செய்ய முடியாததை முதலமைச்சர் கலைஞர் செய்துள்ளார். இதை என்றும் கொங்கு சமுதாயம் மறவாது ” – எனப் பழைய கோட்டை பட்டக்காரரும் , காமராஜர் அவையில் அமைச்சராகப் பதவி வகித்த திரு. சர்க்கரை மன்றாடியார் அவர்கள் 03 -07 -1975 அன்று நடந்த விழாவில் பேசியுள்ளார்.
இப்படி இந்த இந்த சமூகத்துக்கு நல்லது செஞ்சோம்னு இல்லாமல் தமிழ்ச் சமூகமும் மக்களும் ஒருங்கே நல்லா இருக்கனும்னு வேலை செய்து இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகமும், தலைவர் கலைஞரும்.
இன்றும் எதிர்க்கட்சியாக இருப்பினும் தலைவர் . தளபதி அவர்கள் NEET தேர்வுக்கு எதிர்த்துத் தொடர் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.
10000 சீட் NEET நம்ம தமிழ் மாணவர்கள் கிட்ட இருந்து பரிச்சு இருக்கு .இதில் அதிகம் பாதிக்கப் பட்டது கொங்கு சமூகமும், தேவர் சமூகத்தவரும் தான்.
இது குறித்து FRONTLINE ARTICLE – DATA ம் உள்ளது. நீங்க சொல்லுங்க மாமா . NEET இருந்தால் நீங்கள் இன்று மருத்துவர் ஆகி இருக்க முடியுமா ??
முடியாதுங்க மாப்பிள்ளை. கஷ்டம் தானுங்க.
(குறிப்பு – மாமா அவர்கள் மருத்துவர் என்பது குறிப்பிட தக்கது )
இப்போ சொல்லுங்க மாமா . நம்ம சமூகத்துக்குத் துரோகம் செய்தது யார் ??
உண்மையான சாதிப் பற்று என்பது இன்று சிலர் சொல்லிக் கொள்ளும் ஆண்ட பரம்பரை கதைகள் மற்றும் 50 ஆண்டு பெருமைகளும் வீண் பந்தாவும் இல்லீங்க மாமா.
ஒவ்வொரு ஊரிலும் சாதி சங்கங்கள் அமைத்து, அந்த அந்த பகுதி மாணவர்களுக்கு, படிப்பதற்கு உதவித் தொகை, அதிக மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதிகள் அமைத்துக் கொடுத்தது, என தன் சார்ந்த சமூக முன்னேற்றத்திற்காக உழைப்பது தான்.
தன் சமூகத்தைச் சேர்ந்த ஏழை எளிய மாணவரின் கல்விக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது தான் ஒவ்வொரு சமூகமும் உயர்வதற்கான ஒரே வழி என்று நான் நம்புகிறேன் மாமா.
மாமா – சரிங்க மாப்பிள்ளை. வீட்ல கேட்டேன் சொல்லுங்க வச்சிடுறேன் .
அனைத்து தமிழ்ச் சமூக மக்கள் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றது திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும்.
இன்று வரை எந்த சமூக, சமுதாய பேதமின்றி தமிழ்ச் சமூகம் அனைத்து தரப்பினரும் கல்வி, உயர் படிப்பு, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், தொழில் முனைவோர் முன்னேற்றம், சமூக முன்னேற்றம் பெறப் பாடுபடுகின்றோம்.
“நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை என் எதிரி தான் தீர்மானிக்கிறான்” – புரட்சியாளர் மாவோ
ஆனால் இது போன்ற விவாதங்கள், தனிப்பட்ட முறையில் ஒரு சமூகம் முன்னேற என்ன என்ன செய்து இருக்கின்றது என விளக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப் படுகின்றோம்.
– கார்த்திகேய சிவசேனாபதி
22-10-2020
குறிப்பு – இந்த உரையாடல் கொங்கு வழக்கு மொழியின் படியே ஆவணம் செய்யப் பட்டது .