நேற்று தமிழகத்தின் புகழ்பெற்ற பழமையான எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் ENACTUS – குழுவின் (கல்லூரி மாணவியர் ஒருங்கிணைத்து நடத்தக் கூடிய ஒரு பொதுச்சேவை அமைப்பின்) இந்த வருடத்திற்கான துவக்க விழாவில் தலைமை ஏற்றுச் சென்று இருந்தேன்.

1000 மேற்பட்ட கல்லூரி மாணவியருடன் உரையாடியதில் மட்டற்ற மகிழ்ச்சி. அதே போல் ENACTUS – அமைப்பின் மூலம் கல்லூரி மாணவியர் ஒன்று கூடி திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு பகுதியில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பெருக்க, அவர்களுடன் பணி செய்து வருகின்றார்கள். அந்த கிராமப்புற பெண்களுக்குச் சவர்க்காரம் (ORGANIC SOAP), மெழுகுவர்த்தி, (CANDLES ), மற்றும் பெண்கள் அழகு சார் அணிகலன்கள் (ACCESSORIES ) செய்ய கற்றுக் கொடுத்து அதைச் சென்னையில் கல்லூரியில் விற்று வரும் லாபத்தை / வருமானத்தைத் திருவள்ளூர் மாவட்ட பெண்களுக்கு அளித்தும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி வகை செய்து வருகிறார்கள்.

மிகச் சிறந்த சேவையை ENACTUS – எத்திராஜ் கல்லூரி மாணவியர் செய்து வருவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது.

அவர்களுக்கு என்னால் இயன்ற எல்லா உதவியும் செய்கிறேன் என்றும் உறுதி அளித்து உள்ளேன். திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் அரசு அதிகாரிகளின் தொடர்பிற்கு உறுதி அளித்து உள்ளேன்.

அது போல அவர்களுடன் பல விடயங்களில் பேசிக் கொண்டு இருந்த பொழுது எதற்காக நம் நீர் அதரங்களில் வேலை செய்ய வேண்டும், கோவை திருப்பூர் மாவட்டங்களில் எப்படி நீர் ஆதாரங்களில் தனியார் அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அந்த அந்த ஊரில் இருக்கக் கூடிய வனத்துக்குள் திருப்பூர் சிறுதுளி ஐந்திணை சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையம் இவை எல்லாம் ஒன்று கூடி பாரம்பரிய கால்நடை பாரம்பரிய விவசாயம் போன்ற வற்றில் வேலை செய்வதையும், அதன் தேவையும், சென்னையில் இது போன்ற அமைப்புகள் ஒன்றிணைத்துச் செயல்பட வேண்டிய அவசியத்தையும், நாம் வாழும் இப்புவியை, இயற்கையை, சுற்றுச்சூழல் , நீர் ஆதாரங்களை, நம் தலைமுறை தாண்டிக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன்.

கல்வி பரவலாக்கல், பெண்களின் கல்வி குறித்த உரையாடலின் பொது அரசுப் பள்ளியில் பயின்றவர்கள் எண்ணிக்கை அறிய முற்பட்ட பொது, 1000 மாணவியர் குழுமியிருந்த கூட்டத்தில், ஆறு மாணவியர் மற்றும் பார்வையாளர், ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் 4 பேர் மட்டுமே அரசுப் பள்ளியில் பயின்றதாய் கூறினார்.

அடுத்த கேள்வியைத் தாய் தந்தை அரசுப் பள்ளியில் பயின்றவர்கள் யார் யார் என்ற கேள்வியின் போது அந்த அரங்கில் அமர்ந்து இருந்தவர்களில் 75 % பேர் பெற்றோர் அரசுப் பள்ளியில் பயின்றவர்கள். இது ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

எப்படி அரசு தனது கடமையை ஒரு தலைமுறைக்குக் கல்வி, மருத்துவம், உணவு, ஆகியவற்றை வழங்கி அடுத்த தலைமுறையை முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டு.

இவ்வசதிகள் கிடைக்காதவர்கள் முன்னேற இயலாதவர்களுக்கு மீண்டும் அரசு உதவிகள் தொடர்ந்து கிடைக்கும் படியும், FREEBIE வார்த்தையின் அரசியலையும், புரிந்து கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமை எனக் கூறியதை மாணவிகளும் ஏற்றுக் கொண்டனர்.

மேலும் மாணவிகளின் பெற்றோர் படித்த காலத்தில், அரசு வீண் விரயம் செய்கின்றது எனப் பள்ளி கல்லூரிகளை மூடிவிட்டால் உங்களுக்கு இன்று இந்த கல்வியும், வசதி வாய்ப்பும் எவ்வாறும் அமைந்து இருக்கும் ? தமிழக அரசுத் திட்டங்கள் FREEBIE அல்ல அவை WELFARE SCHEME என்ற விதையையும் அவர்களிடம் விதைத்ததில் பெரும் மனநிறைவு அடைகின்றேன்.

மிகசிறந்த நிகழ்வாக அமைந்தது, இதனை ஒருங்கிணைத்த கல்லூரி நிர்வாகத்திற்கும், மாணவியருக்கும், எனது மனமார்ந்த நன்றியும், பாராட்டுகளையும், தெரிவித்துக் கொள்கின்றேன்.

– கார்த்திகேய சிவசேனாபதி
03 -08 -2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *