அன்புள்ள சூப்பர்ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு,

நலம் நாடுவதும் அதுவே !!

சங்ககாலத்தில் சிந்து வெளி நாகரிகத்தில், கீழடியில், ஆதிச்சநல்லூரில், கல்வி பரவலாக்கம், சாமானியனுக்குக் கல்வி,(குயவர்களும் கல்வி கற்று இருந்தனர்) என்பது சான்றோடு வெளிப்படுகின்றது. பெண் தெய்வ வழிபாடு, ஆண் பெண் சம உரிமை, ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமூக கூட்டமைப்பு போன்ற பெரும் பண்பாடுகளின் சான்றாக வாழ்ந்து வந்தனர் தமிழர்கள்.

சில மன்னர்களின் ஆட்சிக்குப் பின்னர் தமிழரின் நிலை தடுமாறி தடம் மாறியது. கல்வி , மூடநம்பிக்கை, எனக் கடந்த ஆயிரம் ஆண்டுகள் ஓர் இருண்ட காலமாகவே கடந்து வந்துள்ளனர் தமிழர்கள். அதற்குப் பின் எங்கள் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது, நீதிக்கட்சி, திராவிட கழகம், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர், MGR , அம்மா ஆகியோரின் ஆட்சிக் காலங்கள்.

1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான் சங்ககால தமிழனின் வாழ்வியல் உயிர் பெற்று, கல்வி சமூக நீதி, போன்றவை ஈரோடு கிழவன் பெரியார் விதைத்த விதையினால் தான் இன்றைய தலைமுறை கல்வியின் பயன்பெற்று வாழ்வின் உயர் நிலைகளை அடைய முடிந்தது.

ஆனால் அன்றும் திரு.ராஜாஜி போல் வலது சாரி சித்தாந்தத்தின் சான்றுகள், பள்ளிகளை மூட, குலக் கல்வி திட்டத்தினை முன்னெடுக்க, அவற்றையெல்லாம் பெரியார் எதிர்த்துப் போராடி, ஐயா காமராஜருக்கு ஆதரவு அளித்து, அவரை முதல்வர் அரியணை ஏற்றி திரு. ராஜாஜி அவர்கள் மூடிய பள்ளிகளைத் திறந்தார்.

அண்ணாவின் ஆட்சிக்குப் பின் கிராமத்திற்கு ஓர் பள்ளிக்கூடம் எனத் திறந்து எங்களின் பூட்டான், பாட்டன், தாத்தா என அனைவரும் எழுத்தறிவு பெற்று, இழந்த தமிழர் பெருமை மீட்டு எடுத்து , மேற்படிப்பினை தன் வசம் பெற்று மருத்துவர், வழக்கறிஞர், பொறியியல் வல்லுநர்கள், அரசு அதிகாரிகள், IAS , IPS IRS IFS அதிகாரிகள் எனப் பல உயர்நிலைகள் அடைந்து வாழ்ந்து காட்டுகின்றோம்.

இந்த புரிதல் ஏதும் இன்றி, அல்லது புரிந்தும் புரியாதது போல் நடித்துக் கொண்டு பெரியாரைப் பற்றிப் பேசி இருக்கிறீர்கள்.

உங்கள் ஆன்மீக அரசியல் நாங்கள் அறிந்ததே !!

ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரி அன்று, எங்கள் பேரூர் ஆதீனம், கெளமார மடாலயம் குன்றக்குடி அடிகளார் போன்றோரின் காவியை மதிக்கவும் உங்களைப் போன்ற சிலரின் காவியை விரட்டி அடிக்கவும் தெரியும்.

எந்த காவி எங்களை வர்ணாஷ்ரமம், மனுஸ்ம்ரிதியினால் அடக்கி எண்களின், கல்வி, மொழி கலாச்சாரம் , வாழ்வியல் முறை என அனைத்தையும் அழித்து எங்கள் வாழ்வைச் சீர்குலைக்கும் என்பதையும் நன்கு அறியும் பகுத்தறிவும் கொண்டு உள்ளோம்.

எந்த காவியின் ஆன்மீகத்தில் உண்மை உள்ளது, எங்களின் மேல் பற்று உண்டு, எங்களிடம் வேறுபாடு பாராட்டாமல், எங்களை அரவணைத்து எங்களின் மொழி, கலாச்சாரத்தை ஏந்தி நிற்கும் என்று வேறுபடுத்தும் பகுத்தறிவைக் கொண்டு உள்ளோம்.

உங்களுக்கான எனது நான்கு கேள்விகள்

1 . பெரியாரையும் பெரியாரின் சித்தாந்தத்தையும் அறிந்து புரிந்து உணர்ந்து பேசுங்கள். பிதற்றல்களை நிறுத்தி கொள்ளுங்கள். உங்கள் குடும்பச் சூழல் உங்களுக்குப் பெரியாரைப் பற்றி அறியும் வாய்ப்பை அளித்து இருக்காது. ஆதலால் உங்களுக்குப் பெரியாரைக் குறித்த சில புத்தகங்களை அன்பளிப்பாக அனுப்பி வைக்கின்றேன். படித்துப் பாருங்கள். முடிந்தால் பிறகு பதில் அளியுங்கள் .

2 . பல முறை நீங்கள் செய்தி தொடர்பாளர்களை உங்கள் வீடு வாசலின் சந்தித்துப் பார்த்து இருக்கிறேன். எதற்காக உங்கள் வீடு கதவுகள் எங்கள் ஊடக நண்பர்களுக்காகத் திறக்கப்படவில்லை ??

ஒவ்வொரு முறையும் உங்கள் வீடு சுவருக்கு வெளியில் நின்று தான் தமிழக ஊடகங்களைச் சந்திக்கிறீர்கள். இத்தனை ஆண்டுக் காலம் தமிழகத்திலிருந்தும் தமிழர் பண்பான விருந்தோம்பலை நீங்கள் கற்றுக் கொள்ளாமல் இருப்பது ஆச்சிரியத்தையும் வருத்தத்தையும் அளிக்கின்றது .தெரியும், நாங்கள் சூத்திரர்கள் தான் பஞ்சமர்கள் தான் உங்கள் அகராதியில் .

ஆனால் நீங்கள் பொது வாழ்க்கையை ஏற்று இருக்கிறீர்கள், ஆக தங்களின் வீட்டு அலுவலகங்களின் கதவுகள் கூட எங்கள் ஊடக சகோதர சகோதரியினர்கக திறக்காதது ஏன் ? உங்கள் மனப்பான்மை கேள்விக்குரியது !!

ஒரு சாமானியனாகப் பல முறை ஊடகங்களைச் சந்தித்து இருக்கின்றேன். எனது அலுவலகத்தில் , கிராமத்தில் வீட்டினில் சந்தித்து இருக்கிறேன். ஒரு முறை கூட உங்களைப் போன்று வாசலில் நிறுத்திச் சந்தித்தது இல்லை. என்னைப் போன்ற சாமானியனே இதை எல்லாம் கடைப் பிடிக்கும் பொழுது நீங்கள் ஓர் ஆன்மீக அரசியல்வாதி. தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் . பெரும் பணக்காரர்.

நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் , என்ற மனப்போக்கைச் எங்கள் செய்தியாளர்களிடம் “THE FOURTH PILLAR OF NATION ” என்ற அழைக்கும் ஊடகத்தினரிடமே நீங்கள் இப்படி நடந்து கொள்வது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கின்றது.

ஆகவே இனியாவது உங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள எங்கள் ஊடக நண்பர்களின் சுய மரியாதையைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டுகிறேன்.

3 . பொதுவாகத் திரு.கமலஹாசன் குறித்தோ அவரின் கட்சியான மக்கள் நீதி மையம் குறித்தோ நடிகர்கள் திரு. விஜய் , திரு.அஜித், திரு.சூர்யா குறித்தோ இவர்களின் கருத்துக்களுக்கு மாற்றாக யாரேனும் கருத்துகளை முன்வைத்தால் இவர்களின் விசிறிகள் அதற்குத் தக்க பதில் தருவார்கள், விவாதங்கள் முன்னெடுக்கப்படும், சில சமயங்களில் சர்ச்சைகளும் ஏற்பட்டு உள்ளது.

ஆனால் உங்களுக்கு எதிர்வினையாகக் கருத்தைப் பதிவு செய்தால் உங்கள் ரசிகர்கள் அதற்கான பதிலையோ எதிர்வினையோ கொடுக்காமல், ஏன் பாரதிய ஜனதா கட்சியின் செயலாளர் திரு. H ராஜா , தமிழக செயலாளர் திரு. KT ராகவன் , திரு. ல் கணேசன் திரு அர்ஜுன் சம்பத் (ஹிந்துத்வ ஆதரவாளர்கள்) என அனைவரும் உங்களுக்கு ஆதரவான கருத்துக்களைப் பதிவு செய்கின்றனர். அவர்கள் தான் உங்களின் விசிறிகளா ? அல்லது நீங்கள் அவர்கள் சார்ந்த சித்தாந்தத்தைச் சேர்ந்தவரா ?

4 . உங்கள் படத்தைத் திரை அரங்குகளில் ஆராதனை செய்து வரவேற்று இன்று தங்களின் பொருளாதார நிலைக்கான ஆதாரமான தமிழர்கள் மற்றும் தமிழகத்தைப் பாதிக்கக் கூடிய பலவிதமான விடயங்கள் குறிப்பாக , NEET கதிரமங்கலம், புதிய கல்விக் கொள்கை , ஹைட்ரா கார்பன் திட்டங்கள் , ஐந்து மட்டும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு , NEET தேர்வில் ஏழை எளிய மாணவர்கள் விண்ணப்பம் கூடப் பெற முடியாத சூழ்நிலை எனத் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் என எதற்கும் கேள்வி எழுப்பாமல், சுமார் ஐம்பது ஆண்டுக்கு முன்னர் இறந்து போன பெரியாரை ஏன் பேசுகிறீர்கள்??

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எதிரான பொதுத் தேர்வினை குறித்து நாங்கள் பேசாமல் எங்களைத் திசை திருப்பத்தான் இந்த நாடகங்களா ??

உங்கள் பதிலை அன்புடன் எதிர் நோக்கும்

– கார்த்திகேய சிவசேனாபதி
23-01-2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *